கோலாலம்பூர், ஆகஸ்ட் 16 — இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் இருந்த 16 மலேசிய சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகம் சம்பந்தப்பட்ட மலேசிய சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொண்டதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அல்லது அப்பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிலநடுக்க நிலவரத்தை வெளியுறவு அமைச்சு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், மலேசியர்கள் தொடர்பான புதிய தகவல்கள் ஏதேனும் கிடைத்தால் அவை உடனடியாகப் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், வெளிநாடுகளில் வசிக்கும் அல்லது பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள் தங்களது விவரங்களை e-Konsular இணையவழி தளத்தில் பதிவு செய்து, தொடர்பு தகவல்களை அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ளுமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
அவசர தூதரக உதவி தேவைப்படும் அல்லது அவசரநிலையை எதிர்கொள்ளும் மலேசியர்கள் ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகத்தின் அவசரத் தொலைபேசி எண்ணான +62 813 8081 3036 அல்லது mwjakarta@kln.gov.my என்ற மின்னஞ்சல் முகவரி வழியாகத் தொடர்புகொள்ளலாம்.







