ஜகார்த்தா, ஆகஸ்ட் 15: இன்று அதிகாலை இந்தோனேசியாவில் அமைந்துள்ள புளோரஸ் தீவில் சக்திவாய்ந்த 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS இந்தத் தகவலை வெளியிட்டது.
மேலும், இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால், அதிர்வுகள் வலுவாக உணரப்பட்டிருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.
முதன்மை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதே பகுதியில் அடுத்தடுத்து இரு வலுவான பின்னதிர்வுகளும் பதிவாகின. அவை முறையே 5.6 மற்றும் 5.9 ரிக்டர் அளவில் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவியியல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது.
இதனால் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் தொடர்பான தகவல்கள் மற்றும் சுனாமி அபாயம் குறித்து இந்தோனேசிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.







