கோலகங்சார், ஆகஸ்ட் 14 : பேராக் மாநிலத்தின் கோலாகங்சாரில் உள்ள சாயோங் பாலத்திற்கு (Sayong Bridge) அருகேயுள்ள ஷா ஆலாம், ஆகஸ்ட் 14 - பேராக் ஆற்றில், துணிப் பெட்டி ஒன்றில் அடைக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று இன்று கண்டெடுக்கப்பட்டது.
உடல் சிதைந்திருந்த நிலையை வைத்து , அது கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த ஒரு பெண்ணின் சடலமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நெகிழிப் பையினால் சுற்றப்பட்டிருந்த அந்த துணிப் பெட்டியை , சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஓட்டுநர் ஒருவர் கண்டுபிடித்தார்.
இன்று மதியம் போலிசிடமிருந்து அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, கோலாகங்சார் தீயணைப்பு , மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக பேராக் தீயணைப்பு மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் சபாரோட்ஜி நோர் அகமட் (Sabarodzi Nor Ahmad) தெரிவித்தார்.
போலிசாரின் இந்த மீட்பு நடவடிக்கையைப் பார்ப்பதற்காக அப்பகுதியில் பெருமளவிலான பொதுமக்கள் கூடியிருந்தனர். மாலை 6:40 மணியளவில் காவல்துறையின் தடயவியல் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர்.
சுற்றுலாப் படகு ஓட்டுநர்கள் இந்த துணிப் பெட்டியைக் கடந்த சில நாட்களுக்கு முன்பே கவனித்திருந்தாலும், அதற்குள் என்ன இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
இன்று அந்த உடலின் ஒரு பகுதி வெளியே தெரிந்து, துர்நாற்றம் வீசத் தொடங்கிய பிறகே சூட்கேஸிற்குள் சடலம் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.







