ஈப்போ, ஆகஸ்ட் 2 — தஞ்சோங் ஹந்து, பங்கோர் தீவில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கடலில் மிதப்பதாக மலேசிய கடல்சார் அமலாக்கத்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இச்சம்பவம் தொடர்பாக தங்களுக்கு நேற்று காலை 10.31 மணியளவில் அவசர அழைப்பு வந்ததாகப் பேராக் மாநில கடல்சார் அமலாக்கத்துறை இயக்குனர் தெரிவித்தார்.
உடனே அந்தத் தகவலின் அடிப்படையில் 'போட் பெங்கலாங் 1639' (Bot Penggalang 1639) ரோந்துப் படகு தஞ்சோங் ஹந்துவிற்குத் தென்மேற்கே சுமார் 1.3 கடல் மைல் தொலைவில் உள்ள அந்த இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலம் இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
கருப்பு நிறச் சட்டை மற்றும் கால்சட்டை (shorts) அணிந்திருந்த அந்தச் சடலம் மீட்கப்பட்டு கம்போங் அச்சே மீன்பிடி ஜெட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மேலும், அடையாளத்தைக் கண்டறிதல், பிரேதப் பரிசோதனை மற்றும் மேல் விசாரணைகளுக்காக அச்சடலம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, கடல்சார் சமூகத்தினரும் பொதுமக்களும் கடல் பகுதியில் ஏதேனும் விபத்துகள் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்துத் தகவல் தெரிவிக்க விரும்பினால், 05-683 8737 என்ற எண்ணில் பேராக் கடல்சார் தலைமையக இயக்க மையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு அல்லது 999 என்ற அவசர உதவி எண்ணை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.







