ஷா ஆலம், ஆகஸ்ட் 14 : நாளை (ஆகஸ்ட் 15) முதல் ஷா ஆலம் வழித்தடத்தின் எல். ஆர்.டி 3 (LRT3) ரயில் சேவையைப் பயன்படுத்தும் பயணிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக ரேபிட் கேஎல் (Rapid KL) நிறுவனம் அறிவித்தது.
அந்த ரயில் போக்குவரத்து சேவையின் ஆறு வார கால இலவசப் பயணம் இன்றுடன் நிறைவடைகிறது.
அதைத் தொடர்ந்து, LRT3 இரயில் சேவையுடன் , அந்த வழித்தடங்களில் இயக்கப்படும் இடைமாற்றுப் பேருந்துகள் (Feeder buses) மற்றும் 'பார்க் அண்ட் ரைட்' (Park N' Ride) வாகன நிறுத்துமிட வசதிகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆறு வார கால இலவசப் பயணச் சலுகை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, இந்த ஷா ஆலம் வழித்தட LRT3 சேவை தற்போது தனது அடுத்தகட்ட கட்டண செயல்பாட்டிற்குள் நுழைகிறது என ரேபிட் கேஎல் நிறுவனம் தெரிவித்தது.
பயண அட்டைகளைப் பயன்படுத்தும் பயணிகள், தங்களது அட்டையில் குறைந்தபட்சம் 5 ரிங்கிட் இருப்புத் தொகை (Balance) இருப்பதை உறுதிசெய்துக் கொள்ள வேண்டும்.
பயணிகள் இந்த வழித்தடத்திற்கான கட்டண விபரங்களை மைரேபிட் (MyRapid) அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலமாகவோ அல்லது இரயில் நிலையங்களுக்குச் சென்றோ சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும், தகுதியுடைய நபர்களுக்கு மைரேபிட் சலுகை அட்டைகள் (MyRapid Concession Card) மூலமாகச் சலுகைக் கட்டணங்களும் வழங்கப்படும்.
மாணவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இந்தச் சலுகைக் கட்டணங்களைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
அவர்கள் தங்களுக்குரிய சலுகை அட்டைகளைப் பயன்படுத்தி இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளலாம்.









