ஷா ஆலாம், ஜூலை 29 — ஷா ஆலாம் பகுதியில் உள்ள இலகுரக ரயில் போக்குவரத்து 3 (LRT3) நிலையங்களை இணைக்கும் பாதசாரிகளுக்கான நடைபாதை அமைக்கும் பணிகள் சீராக நடைபெற்று வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் இப்பணிகள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஷா ஆலம் மேயர் டத்தோ சபிதா சஃபார் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் ரயில் சேவைகளைப் பாதுகாப்பாகவும் எளிதாகவும் அணுக முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டம், டத்தோ மந்திரி, பிரிவு 7, யுஐடிஎம் (UiTM) மற்றும் ஸ்டேடியம் ஆகிய நான்கு முக்கிய நிலையங்களை உள்ளடக்கியுள்ளது என்று அவர் கூறினார்.
மாநகர மன்றத்தின் கீழ் ஐந்து பாதசாரிகளுக்கான நடைபாதைகள் கட்டப்பட்டு வரும் நிலையில் மற்ற சில இணைப்புப் பாதைகள் பிரசரானா மலேசியா பெர்காட், PKNS, மேலாண்மை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் (MSU), ஸ்டார்ஹில் செஞ்சுரி எஸ்டிஎன் பிஎச்ட் (Starhill Century Sdn Bhd) மற்றும் பிற டெவலப்பர்களின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
"பொதுமக்கள் எல்.ஆர்.டி3 நிலையங்களுக்குப் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நடந்து செல்வதை உறுதி செய்வதற்காகப், பாதசாரிகளுக்கான நடைபாதை திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என அவர் தெரிவித்தார்.
மாநகர மன்றத்தின் பொறுப்பில் உள்ள இப்பணிகளுக்காக எம்பிஎஸ்ஏ(MBSA) சுமார் 2.7 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், மீதமுள்ள கட்டுமானச் செலவுகளைத் திட்டத்தில் பங்குபெறும் நிறுவனங்களும் முகமைகளும் ஏற்றுக்கொள்வதாகவும் சபிதா விளக்கமளித்தார்.







