சிலாங்கூரில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறைந்துள்ளது

12 ஆகஸ்ட் 2026, 6:53 AM
சிலாங்கூரில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறைந்துள்ளது

ஷா ஆலாம், ஆகஸ்ட் 12 — சிலாங்கூரில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறைந்துள்ளது என மாநிலப் பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டண வசூல் கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

2023ஆம் ஆண்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணமாக RM13.35 மில்லியன் வசூலிக்கப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டு அந்தத் தொகை RM9.04 மில்லியனாகக் குறைந்தது. தொடர்ந்து 2025ஆம் ஆண்டில் RM6.97 மில்லியனாக வசூல் மேலும் சரிந்துள்ளது.

தொடர்ச்சியாகப் பதிவாகி வரும் இந்தச் சரிவு, மக்களிடையே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறைந்து வருவதற்கான அறிகுறியாகும் என ஜமாலியா கூறினார்.

எனினும், பிளாஸ்டிக் பைகளின் ஒட்டுமொத்த பயன்பாடு எந்த அளவுக்குக் குறைந்துள்ளது என்பதை அளவிடும் குறிப்பிட்ட ஆய்வு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டண வசூலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை, நுகர்வோரின் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் கண்காணிக்கும் முக்கிய குறியீடுகளில் ஒன்றாக மாநில அரசு பயன்படுத்தி வருகிறது.

சிலாங்கூர் மாநில அரசு 2010ஆம் ஆண்டு தொடங்கிய Plastic-Free Campaign மற்றும் 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்பட்ட 20 சென் கட்டணம் ஆகியவை பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரித்துள்ளது என்றார் ஜமாலியா.

இதனிடையே, பல்பொருள் அங்காடிகள் மற்றும் அதிகமான வர்த்தக நிறுவனங்கள், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை இலவசமாக வழங்குவதை நிறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலம் 2030ஆம் ஆண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் அழிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

இந்த இலக்கை அடைவது சவாலானதாக இருந்தாலும், கொள்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்துதல், முறையான அமலாக்கம், பொதுமக்களுக்கான கல்வி மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு ஆகியவை நீடித்தால் இலக்கை அடைய முடியும் என ஜமாலியா நம்பிக்கை தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.