ஷா ஆலம், ஜூன் 11: சிப்பாங் வட்டாரத்தில் உள்ளூர் மக்களுக்குச் சொந்தமான வணிக உரிமங்களை (Lesen Perniagaan) சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, வெளிநாட்டவர்களால் நடத்தப்பட்டு வந்த வணிக வளாகங்களின் செயல்பாடுகளை மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடத்திய அமலாக்க நடவடிக்கையின் மூலம் முறியடித்துள்ளது.
இந்த சோதனையின் போது, சம்பந்தப்பட்ட வணிக வளாகங்களில் சட்டவிரோதமாக வியாபாரம் செய்ததோடு, தங்களுக்கு வழங்கப்பட்ட சமூகப் பயண அனுமதியை (Social Visit Pass) தவறாகப் பயன்படுத்தி வேலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 13 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிநுழைவுத் துறை தங்களது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தச் சோதனையானது மளிகைக் கடைகள் மற்றும் மினி மார்க்கெட்டுகளாகச் செயல்பட்டு வந்த ஆறு வணிக வளாகங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டது.
இதில் சில கடைகளில் குறிப்பாக பங்களாடேஷ் நாட்டு வாடிக்கையாளர்களை மட்டுமே குறிவைத்து, அவர்களுக்கான பிரத்யேக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
அதுமட்டுமின்றி, கடைகளில் பொருட்கள் வாங்குபவர்கள் 'கியூஆர் கோட்' (QR Code) மூலம் பணம் செலுத்தும்போது, அந்த இணையப் பரிவர்த்தனைப் பணம் வெளிநாட்டவருக்குச் சொந்தமான வங்கிச் கணக்கிற்குச் செல்வதையும் அதிகாரிகள் இந்தச் சோதனையின் போது கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள அந்த 13 வெளிநாட்டவர்களும், மேல் விசாரணைக்கு உதவும் பொருட்டு புத்ராஜெயா குடிநுழைவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான விசாரணைகள் 1959/63 குடிநுழைவுச் சட்டம், 1966 கடப்பிதழ் சட்டம் மற்றும் 1963 குடிநுழைவு விதிமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், நாட்டின் குடிநுழைவுச் சட்டங்களை மீறும் எவராக இருந்தாலும், குறிப்பாக மனிதக் கடத்தல் மற்றும் குடியேறிகளை சட்டவிரோதமாகக் கடத்துதல் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடும் தரப்பினருக்கு எதிராகத் தொடர்ந்து மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மலேசிய குடிநுழைவுத் துறை திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.







