புத்ராஜெயா, ஜூன் 24: பராமரிப்புப் பணிகளை (System Maintenance) மேற்கொள்வதற்காக, நாடு முழுவதும் உள்ள 71 கடப்பிதழ் (Passport) சேவை முகப்பிடங்கள் தற்காலிகமாக மூடப்படும் என்று மலேசிய குடிநுழைவுத்துறை அறிவித்துள்ளது.
சேவை முகப்பிடங்களில் நேரடியாக சமர்ப்பிக்கப்படும் கடப்பிதழ் விண்ணப்பங்கள், 'மைஒன்லைன் பாஸ்போர்ட்' (MyOnline Passport) மூலமாகச் செய்யப்படும் இணையப்பக்க விண்ணப்பங்கள் மற்றும் கடப்பிதழ் அச்சிடும் சேவைகள் என அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும்.
இந்தத் தற்காலிக சேவை நிறுத்தம் நடவடிக்கை பல கட்டங்களாக மேற்கொள்ளப்படவிருக்கும் வேளையில், அதன் முதற்கட்டப் பணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) முதல் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) வரை மேற்கொள்ளப்படும்.
இதில் புத்ராஜெயாவில் உள்ள குடிநுழைவுத்துறை தலைமையகம், ஜாலான் டூத்தா, மலாக்கா, கெலானா ஜெயா மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) ஆகிய இடங்களில் உள்ள கடப்பிதழ் சேவை அலுவலகங்கள் உள்ளடங்கியுள்ளன.
அதே வேளையில், நாட்டின் ஒன்பது நகர்ப்புற உருமாற்று மையங்களில் (UTC) உள்ள குடிநுழைவுத்துறை அலுவலகங்களும் இந்த முதற்கட்ட மூடல் நடவடிக்கையால் பாதிக்கப்படும் என்று அதன் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுடிசி புடு சென்ட்ரல் (புடுராயா), யுடிசி சிலாங்கூர், யுடிசி ஜோகூர் பாரு, யுடிசி பாசிர் கூடாங், யுடிசி சிரம்பான், யுடிசி ஈப்போ, யுடிசி கெடா, யுடிசி சுங்கை பட்டாணி மற்றும் யுடிசி செபராங் பிறை ஆகிய மையங்களில் உள்ள கடப்பிதழ் சேவை முகப்பிடங்கள் இந்த ஐந்து நாட்களுக்குச் செயல்படாது.






