ஷா ஆலம், ஆகஸ்ட் 10 – சிலாங்கூரில் புகைமூட்டத்தின் நிலைமையை மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
காற்றுத் தரக் குறியீடு எனப்படும் ஐ.பி.யூ. அளவு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானால், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, காற்றுத் தரக் குறியீடு 100-ஐத் தாண்டி ஆரோக்கியமற்ற நிலையை எட்டும் பகுதிகளில், மலேசிய வானிலை ஆய்வுத் துறை மற்றும் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறையின் ஆலோசனையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.
கடந்த இரண்டு முதல் மூன்று நாட்களாக சிலாங்கூரின் சில பகுதிகளில் புகைமூட்ட நிலைமை கணிசமாக மோசமடைந்துள்ளது. குறிப்பாக ஜோஹான் செத்தியா பகுதியில் காற்றுத் தரக் குறியீட்டு அளவு கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அமிருடின் தெரிவித்தார்.
இருப்பினும், கடந்த காலங்களில் காணப்பட்டதுபோன்று தற்போது நிலைமை மோசமடைந்து, புகைமூட்ட அவசரநிலையை அறிவிக்க வேண்டிய அளவுக்கு செல்லவில்லை என்றார் அவர்.







