ஷா ஆலாம், ஆகஸ்ட் 10 — 2030ஆம் ஆண்டுக்குள் பொதுமக்களிடையே பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை 60 விழுக்காடாக அதிகரிக்க, கடுமையான மற்றும் கட்டுப்பாடான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என மலேசிய பொதுப் போக்குவரத்து பயனீட்டாளர் சங்கம் (4PAM) வலியுறுத்தியுள்ளது.
தனியார் வாகனங்களின் மீதான பொதுமக்களின் அதிகப்படியான சார்பைக் குறைக்க, பேருந்துகளுக்கான தனிப்பாதைகளை அமல்படுத்தி அவற்றைக் கடுமையாக கண்காணித்தல், நகர்ப்புறங்களில் நெரிசல் கட்டணம் அறிமுகப்படுத்துதல் மற்றும் எரிபொருள் மானியத்தை மறுசீரமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம் என 4PAM தலைவர் அஜித் ஜோல் தெரிவித்தார்.
தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவோர் பொதுப் போக்குவரத்துக்கு மாற வேண்டுமெனில், பொதுப் போக்குவரத்து அமைப்பு பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும், பல்வேறு சேவைகளுடன் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, பொதுப் போக்குவரத்து பயனீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்புத் தரநிலைகள் எப்போதும் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதுடன், விதிமுறைகளை மீறும் சேவை வழங்குநர்கள் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
“பொதுமக்கள் சரியான நேரத்தில் இயங்கும், தூய்மையான மற்றும் வசதியான சேவைகளை எதிர்பார்க்கின்றனர். ரயில், பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் தடையின்றி இயங்குவதுடன், நிகழ்நேர பயணத் தகவல்களும் நியாயமான கட்டணங்களும் வழங்கப்பட வேண்டும்,” என அஜித் ஜோல், மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இதனிடையே, இரண்டாவது சிலாங்கூர் திட்டமான RS-2இல் முன்மொழியப்பட்டுள்ள ரயில் நிலையங்களுக்கு அருகிலான கூரையுடன் கூடிய நடைபாதைகளை அமைக்கும் திட்டம், பொதுமக்களை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த ஊக்குவிப்பதுடன், குறுகிய தூரப் பயணங்களுக்குத் தனியார் வாகனங்களைப் பயன்படுத்துவதையும் குறைக்கக்கூடும் என அவர் தெரிவித்தார்.
எனினும், இந்தத் திட்டம் வெற்றியடைய ஊராட்சி மன்றங்கள் இடையிலான சிறந்த ஒருங்கிணைப்பு, போதுமான நிதி ஒதுக்கீடு மற்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் பராமரிப்பு ஆகியவை மிகவும் முக்கியமானவை என அஜித் சுட்டிக்காட்டினார்.







