ஷா ஆலாம், ஆகஸ்ட் 27 - சிலாங்கூரின் தற்போதைய 40 விழுக்காடு பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டினை, அடுத்த 5 ஆண்டுகளில் 60 விழுக்காடாக உயர்த்தும், அம்மாநில அரசின் இலக்கை எட்டுவது சாத்தியமே ஆகும்.
இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் யாவும், அந்த இலக்கை எட்டச் செய்யுமென, மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நகர மற்றும் வட்டாரத்துவ திட்டமிடல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் கோபி கிருஷ்ணா நம்பிக்கைத் தெரிவித்தார்.

நடப்பிலுள்ள பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமாக்குவதோடு, நகர்- மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் முயற்சிகளுக்கும் சிலாங்கூர் அரசாங்கம் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
எனினும், இந்த முயற்சிகள் யாவும் வெற்றியடைய வேண்டுமென்றால், பொதுப் போக்குவரத்து மீதான பொது மக்களின் நம்பிக்கையை அது மீட்டெடுக்க வேண்டுமென அவர் மீடியா சிலாங்கூருக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.

இதற்கு முன்பு MRT ரயில் சேவை , சிலாங்கூரை கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளுடன் இணைத்தது. ஆகப் புதிதாக LRT 3 ரயில் சேவை, அதிகமான இடங்களைப் பொது போக்குவரத்தின் மூலமாக சென்றடையும் கூடுதல் தேர்வினை சிலாங்கூர் மக்களுக்கு வழங்கியிருக்கிறது.
அதுமட்டுமின்றி MRT, LRT சேவைகளை ஒருங்கிணைக்கும் விதமாக பண்டார் உத்தாமா (Bandar Utama), கிளன்மேரி (Glenmarie), சுங்கை பிசி (Sungai Besi) ஆகிய 3 முக்கிய Interchange- சேவை மாற்று நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இவை, போக்குவரத்து வகையை மாற்றாமல் சிலாங்கூர் மக்கள் ரயிலில் நீண்ட தூரத்திற்கான பயணத்தை எளிதாக்குவதாக டாக்டர் கோபி கிருஷ்ணா கூறினார்.
அதே வேளை, இந்தப் பயணங்கள் சுமூகமாக அமைவதற்கு பயணிகளின் பாதுகாப்பு அம்சத்தில், மாநில அரசு கூடுதல் கவனம் எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

"உதாரணத்திற்கு , LRT, MRT நிலையங்களில் இருந்து இறங்கி இரவில் வீட்டிற்கோ அல்லது தங்களது இலக்கிற்கோ தைரியமாக நடந்துச் செல்வதற்கான பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
இதுவே பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் முன்வந்து பயன்படுத்துவதற்கு காரணமாக அமையும் " என அவர் கூறினார்.
'Smart City' எனப்படும் விவேக நகர் திட்டத்தின் கீழ், பாதுகாப்பினை அதிகரிக்க நிலையங்களிலும், மக்கள் நடந்துச் செல்லும் பாதைகளிலும் CCTV கேமராக்கள் அதிகம் பொருத்துவதோடு, இரவில் நடைபாதைகளில் போதுமான விளக்கு வெளிச்சம் இருப்பதும் உறுதிச் செய்யப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.
அடுத்து பொது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும், பொதுப் போக்குவரத்தினை அவர்கள் அதிகம் சார்ந்திருப்பதற்கும், அந்த பொது போக்குவரத்து வசதிகள் குறிப்பிட்ட நேரத்தில் தாமதமின்றி, எந்தவோர் இடையூறுமின்றி செயல்படுவதும் மிக முக்கியமென டாக்டர் கோபி கிருஷ்ணா தெரிவித்தார்.

"சாலைகளில் ஏற்படும் நெரிசல், பேருந்துகள், அட்டவணைப்படி குறிப்பிட்ட நேரங்களில் வருவது தாமதமாவதும், தொழில்நுட்ப பிரச்சனைகளால் ரயில்கள் குறிப்பாக வேலை நேரங்களில் தாமதமாவதும், பயணிகளை எரிச்சலடைய வைக்கும் .
தங்கு தடையின்றி பயணிகளின் சுமுகமான பயணத்திற்கு இப்பிரச்சனைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டுமென " அவர் கூறினார்.
இதனிடையே, பொது மக்கள் தனிநபர் வாகனங்களைக் கைவிட்டு பொதுப் போக்குவரத்தினை நாடுவதற்கு, சில கடுமையான முயற்சிகளையும் மாநில அரசாங்கம் எடுக்கலாமென அவர் பரிந்துரைத்தார்.

மேலை நாடுகளில் குறிப்பாக, அண்டை நாடான சிங்கப்பூரில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 80 விழுக்காடாக உள்ளது.
தனது பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்தியிருப்பதோடு, குறிப்பிட்ட சாலை அல்லது நகருக்குள் நுழையும்போது, தனிநபர் வாகனமோட்டிகளுக்கு கட்டணம் விதிக்கும் முறையை அமல்படுத்துகிறது.
"இந்த கட்டண முறையை சிங்கப்பூர் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியபோது, மக்கள் அதை எதிர்க்கவே செய்தனர். ஆனால், தனது சாலை போக்குவரத்தைச் சீராக்க உதவியதோடு, அந்த முயற்சியை தற்போது மக்கள் காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளவே செய்திருக்கின்றனர் " என டாக்டர் கோபி கிருஷ்ணா கூறினார்.
எனினும், இதை மாநில அரசாங்கம் கருத்தில் கொள்வது, மக்களின் வரவேற்பினைச் சார்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பொதுப் போக்குவரத்துக்கான வசதிகளை மேம்படுத்துவது மட்டுமல்ல, மக்கள் அதை பாதுகாப்பானதாகவும், நம்பிக்கைக்குரியதாக மாற்றுவதும், சிலாங்கூரின் பொது போக்குவரத்துப் பயன்பாட்டினை அதிகரிக்கும் முயற்சிகளுக்குக் கைகொடுக்குமென அவர் வலியுறுத்தினார்.








