ஷா ஆலம், ஆகஸ்ட் 7 - சிலாங்கூரில் தற்போது 40 % இருக்கும் பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டினை 60 விழுக்காடாக உயர்த்த மாநில அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
அம்முயற்சியாக , 'சிலாங்கூர் மொபிலிட்டி' (Selangor Mobility) திட்டத்தின் கீழ், பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் வேன்களை வரவழைத்து, வணிக வளாகங்கள் அல்லது இரயில் நிலையங்களுக்குச் செல்லும் DRT சேவை மறுசீரமைக்கப்படும்.
மேலும், பேருந்து நிலையங்களில் இருந்து எல்ஆர்டி (LRT) மற்றும் எம்ஆர்டி (MRT) நிலையங்களுக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் பொதுப் போக்குவரத்தின் எண்ணிக்கை (Kekerapan) அதிகரிக்கப்ப்படுமென மெந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமீருதின் ஷாரி தெரிவித்தார்.
பொதுமக்கள் எளிதாக பாதுகாப்பாக நடந்து செல்வதை ஊக்குவிக்கும் நகரங்களை (Walkable Cities) உருவாக்கும் நோக்கில், ஒவ்வொரு இரயில் நிலையத்திலிருந்தும் 500 மீட்டர் சுற்றளவுக்குள் கூரையிடப்பட்ட நடைபாதைகள் அமைக்கப்படும்.
அதுமட்டுமின்றி, 'ரூமா சிலாங்கூர்கு இடாமான்' (Rumah Selangorku Idaman) மற்றும் 'ரூமா சிலாங்கூர்கு ஹராப்பான்' (Rumah Selangorku Harapan) ஆகிய வீடமைப்புத் திட்டப் பகுதிகளில் வசிப்பவர்கள், பொதுப் போக்குவரத்தை எளிதாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய, ஒவ்வொரு பகுதியிலும் ஒரு பேருந்து நிறுத்தம் அமைப்பது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இன்று மாநில சட்டமன்றக் கூட்டத்தில் RS-2 இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தை தாக்கல் செய்தபோது அமிரூடின் ஷாரி இவ்வாறு குறிப்பிட்டார்.








