கிளானா ஜெயா எல்ஆர்டி வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மாற்று வழிகளைப் பயன்படுத்த பயணிகளுக்கு அறிவுறுத்தல்

18 மே 2026, 2:46 AM
கிளானா ஜெயா எல்ஆர்டி வழித்தடத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மாற்று வழிகளைப் பயன்படுத்த பயணிகளுக்கு அறிவுறுத்தல்

ஷா ஆலாம், மே 18 – கிளானா ஜெயா (Kelana Jaya) எல்ஆர்டி (LRT) நிலையப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று காலை அந்தத் தடத்தில் ரயில் சேவைகள் பெரும் தாமதத்தை எதிர்கொண்டன. இதனால் காலை வேளையில் வேலைகளுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

ரயில் ஒன்றின் முக்கியப் பாகத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக (component failure), அந்த ரயிலை அங்கிருந்து நகர்த்த முடியாமல் போனதே இந்தச் சேவைத் தடைக்குக் காரணம் என்று ரேபிட் கேஎல் (Rapid KL) நிறுவனம் விளக்கியுள்ளது. தற்போதைக்கு அந்தப் பழுதைச் சரிசெய்யும் பணிகள் மிகத் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

"கிளானா ஜெயா எல்ஆர்டி நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு ரயிலை இயக்க முடியாமல் போனதால், ஒட்டுமொத்த ரயில் சேவைகளும் தாமதத்தை எதிர்கொண்டுள்ளன. பழுதுபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அதே வேளையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட நிலையங்களில் நுழைவுக் கட்டுப்பாட்டு முறைகளும் (entry control), பயணிகளின் வழித்தட மேலாண்மைகளும் தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டுள்ளன," என்று ரேபிட் கேஎல் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தத் தாமதத்தால் பயணிகள் தங்களின் இலக்குகளை உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்ய, மாற்றுப் பொதுப் போக்குவரத்து வழிகளைப் பயன்படுத்துமாறு ரேபிட் கேஎல் அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில், அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் (Ampang/Sri Petaling Line), காஜாங் (Kajang Line), புத்ராஜெயா (Putrajaya Line) மற்றும் மோனோரயில் (Monorail Line) போன்ற மாற்று ரயில் சேவைகளைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.