ஷா ஆலாம், ஜூன் 3: சிலாங்கூர் மீள்திறன் மேம்பாட்டுத் தொகுப்புத் திட்டத்தின் (Selangor Resilience Enhancement Package) கீழ் வழங்கப்படும் 30 ரிங்கிட் மாதாந்திர பயணக் கட்டண மானியமானது, மாநிலத்தில் அதிகப்படியான பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் என மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினச் சுமைகளைக் குறைக்க இந்த உதவி பெரிதும் துணைபுரியும் என்பதால், பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக தாம் அறிவித்திருந்த 131 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிலாங்கூர் மீள்திறன் மேம்பாட்டுத் தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆறு மாத காலத்திற்கான இந்தப் பொதுப் போக்குவரத்து பயணக் கட்டண மானியத்திற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 1, 2026 முதல் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பயணங்களைச் சுலபமாக்கிக் கொள்ளவும், அதே வேளையில் பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை அதிகரிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இதற்காக 'நைன்' (NINE) எனும் பிரத்யேகச் செயலி மூலம் முன்கூட்டியே தயாராக இருக்குமாறும் அவர் தமது முகநூல் பதிவின் வாயிலாகக் கேட்டுக்கொண்டார்.
இந்த 'நைன்' (NINE) செயலியின் வழி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களில் தகுதிபெறும் முதல் 50,000 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் தகுதிபெறும் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த குடிமக்கள், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் அனுமதிகளுக்கு உட்பட்டு, ஆறு மாதங்களுக்கு மாதந்தோறும் 30 ரிங்கிட் பயணக் கட்டண மானியத்தைப் பெறவுள்ளனர்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் நெருக்கடியின் தாக்கங்களைச் சமாளிப்பதற்காக, மாநிலத்தின் மீள்திறன் திட்டத்திற்கு 131 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதமே அமிருடின் ஷாரி அறிவித்திருந்தார்.
இந்தத் திட்டமானது மாநிலத்தில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும், மக்களின் வாழ்க்கைச் செலவினச் சுமைகளைக் குறைப்பதையும், பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை அதிகப்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், வாழ்க்கைச் செலவினப் போராட்டத்தை எதிர்கொள்ளும் 50,000 குடும்பங்களுக்கு ஆறு மாத காலத்திற்கு தலா 100 ரிங்கிட் மதிப்புள்ள 'கித்தா சிலாங்கூர்' (Kita Selangor) வவுச்சர்கள் விநியோகிக்கப்படவுள்ளன.
அதோடு, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மாநிலம் முழுவதிலும் உள்ள 873 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களும் இந்த விரிவான திட்டப்பணிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.








