கோலா சிலாங்கூர், ஜூன் 7 – கோலா லங்காட், மோரிப் பகுதியில் நீண்ட நாட்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த ‘ரூமா சிலாங்கூர்கு’ (Rumah Selangorku) மலிவு விலை வீட்டுத்திட்டத்தைக் கையேற்று நடத்துவதற்குப் புதிய மேம்பாட்டாளர் ஒருவருக்கு மாநில அரசு முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளதாக வீட்டுவசதி மற்றும் கலாச்சாரக் குழுவிற்கான மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டத்தோ போர்ஹான் அமான் ஷா தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டுத்திட்டத்தின் அசல் மேம்பாட்டாளர் நிறுவனம் திவாலானதாக அறிவித்ததைத் தொடர்ந்து, கட்டுமானப் பணிகள் முற்றிலுமாக முடங்கிப்போய், வீடு வாங்கியவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
இச்சூழலில், தற்போதைய புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விவரித்தார். இங்கு நடைபெற்ற ‘டேசா கெராயோங் இண்டா’ (Desa Kerayong Indah) திட்டத் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ போர்ஹான், கடந்த மாதம் இப்பிரச்சனை மாநில நிர்வாகக் குழுவின் (MMKN) கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, பாதிக்கப்பட்ட இத்திட்டத்தை மீட்கும் வகையில் புதிய மீட்பு நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
இரண்டு கட்டங்களாகத் திட்டமிடப்பட்ட இந்த வீட்டுத்திட்டத்தில், தற்போது ஒற்றை அடுக்கு மாடி வீடுகளை உள்ளடக்கிய முதலாம் கட்டப் (Phase 1) பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவதாகவும், இப்பணிகள் தற்போது கிட்டத்தட்ட 85 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மோரிப் திட்டமானது சிலாங்கூர் மாநிலத்தில் சிக்கல்களைச் சந்தித்த ஒரு சில மலிவு விலை வீட்டுத்திட்டங்களில் ஒன்றாகும் என்றும், இதற்குச் சுமுகமான தீர்வு காண மாநில அரசு உறுதியுடன் இருப்பதாக முன்னதாக மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டிருந்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.
மேலும் பேசிய டத்தோ போர்ஹான், புதிய மேம்பாட்டாளரின் வருகை, குறிப்பாக இரண்டாம் கட்ட அடுக்குமாடி குடியிருப்புப் பிரிவில் வீடு வாங்கியவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்றார்.
பாதிக்கப்பட்ட இரண்டாம் கட்டப் வாங்குநர்களுக்கு, கூடுதல் கட்டணம் எதுவுமின்றி முதலாம் கட்டத்தில் உள்ள ஒற்றை அடுக்கு மாடி வீடுகள் மாற்றாக வழங்க முன்வரப்பட்டுள்ளது. இதன் மூலம், பல ஆண்டுகள் காத்திருந்த அவர்களுக்கு இறுதியாகத் தங்களின் சொந்த வீட்டைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இத்திட்டம் இன்னும் தாமதமடைந்தால், வீடுகளில் உள்ள கட்டுமானப் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக டத்தோ போர்ஹான் தெரிவித்தார் ,
பாதிக்கப்பட்ட வீடு வாங்குநர்களும் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ‘ஒப்பந்தத் தாமத நஷ்டஈட்டுத் தொகையை’ (LAD) கோரப் போவதில்லை என இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், தற்போதைய சூழலில் அவர்களுக்கு விரைவாக வீடுகளைக் ஒப்படைப்பதே மாநில அரசின் முக்கிய நோக்கம் என்றும் கூறினார்.







