அம்பாங் ஜெயா, ஆகஸ்ட் 8 : சமூக ஊடகங்களில் வெளியாகும் பொதுமக்களின் புகார்களுக்கு உடனடியாகப் பதிலளிக்குமாறு ஊராட்சி மன்றங்களும் (PBT) அரசாங்க நிறுவனங்களும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
அதிகாரப்பூர்வ அறிக்கைகளுக்காகக் காத்திருக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தினார்.
தற்போது பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகளைத் தெரிவிக்கும் முக்கிய ஊடகமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ளன.
அந்த அணுகுமுறையை, அரசாங்கச் சேவையின் மாற்றங்களின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்ளப்பட வேண்டுமென அவர் கூறினார்.
அம்பாங் ஜெயாவில், இன்று நடைபெற்ற ' 2.0 மெலாவாத்தி காப்பி விழா '-வை (Pesta Kopi Melawati 2.0) அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த பின்னர் மந்திரி பெசார் ஊடகங்களைச் சந்தித்தார்.
அதிகாரப்பூர்வ அறிக்கைக்காகக் காத்திருக்காமல் சமூக ஊடகங்கள் மூலம் மக்களுடன் தொடர்புகொண்டு உடனடியாகப் பதிலளித்த அம்பாங் ஜெயா நகராட்சி மன்றத்திற்கு (MPAJ) தனது நன்றியைத் அவர் தெரிவித்துக் கொண்டார்.
அரசாங்கத்தில் உள்ள மற்ற துறைகளும் இந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றாரவர்.
சமூக ஊடகங்களில் பரவிய சாலைப் பள்ளம் குறித்த புகாரை MPAJ விரைந்து சரிசெய்த நடவடிக்கையை மந்திரி பெசார் சுட்டிக் காட்டியிருந்தார்.
"சில நேரங்களில் அறிக்கைகள் சரியாக இருக்கலாம், சில நேரங்களில் துல்லியமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது தவறாக இருந்தால் அதனைத் திருத்த வேண்டும் அல்லது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒன்றாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்று அமிரூடின் ஷாரி வலியுறுத்தினார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த இரண்டாவது சிலாங்கூர் திட்டத்தில் , சமூக ஊடகங்கள் அல்லது அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் பெறப்படும் ஒவ்வொரு புகாருக்கும் தீவிர கவனம் செலுத்தி, சேவையின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துமாறு அனைத்து ஊராட்சி மன்றங்களையும் அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டிருந்தார்.









