ஷா ஆலம், ஆகஸ்ட் 8: எல்லை தாண்டிய புகைமூட்டம் நகர்வு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் பாதிக்கப்படத் தொடங்கியுள்ளது.
சிலாங்கூரில் இரு வெப்பப்புள்ளிகளை (Hotspots) சுற்றுச்சூழல் துறை (JAS) கண்டறிந்துள்ளது.
சுற்றுச்சூழல் துறையின் இன்றைய அறிக்கையின்படி, ஆகஸ்ட் 7-ஆம் தேதி ‘தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக’ (NOAA) செயற்கைக்கோள் படங்கள் மலேசியாவில் 25 வெப்பப்புள்ளிகளைப் பதிவு செய்துள்ளன.
இதில் சரவாக்கில் 22, சிலாங்கூரில் இரண்டு மற்றும் திரெங்கானுவில் ஒன்று அடங்கும்.
அதே நேரத்தில், கலிமந்தானில் 643 வெப்பப்புள்ளிகளும், சுமத்ராவில் 17 வெப்பப்புள்ளிகளும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வெப்ப புள்ளிகள் இவ்வட்டாரத்தில் புகைமூட்டம் பரவுவதற்குக் காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, மூன்று பகுதிகளில் காற்றின் தரம் நன்றாகவும், 60 பகுதிகளில் மிதமாகவும், ஐந்து பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையிலும் பதிவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் துறை தெரிவித்தது.
ஆரோக்கியமற்ற நிலையில் உள்ள அந்த ஐந்து பகுதிகளும் சரவாக்கில் அமைந்துள்ளன.
அந்த ஐந்து பகுதிகள்:
செரியான் காவல்துறை தலைமையகம் (IPD Serian): காற்று மாசு குறியீடு (API) 171
கூச்சிங் (Kuching): API 154
சமரஹான் (Samarahan): API 154
ஸ்ரீ அமான் (Sri Aman): API 139
பிந்துலு (Bintulu): API 124
இதனிடையே,"சுற்றுச்சூழல் துறை திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளுக்கு வாய்ப்புள்ள பகுதிகளில் தினசரி கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது என சுற்றுச்சூழல் துறை கூறியுள்ளது.
தேசிய புகைமூட்ட செயல் திட்டத்தின் (PTJK) கீழ், காற்று மாசு குறியீடு (API) தொடர்ந்து அதிகரித்தால் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்:
API குறியீடு 24 மணி நேரத்திற்கு மேல் 150-ஐத் தாண்டினால் பேரிடர் நிர்வாகக் குழு செயல்படத் தொடங்கும்.
API குறியீடு 100-ஐத் தாண்டும்போது வகுப்பறைக்கு வெளியேயான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்.
API குறியீடு 200-ஐத் தாண்டினால் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மற்றும் நர்சரிகள் மூடப்படும்.
வானிலை நிலவரத்தைப் பொறுத்து, API குறியீடு 24 மணி நேரத்திற்கு மேல் 150-ஐத் தாண்டினால் செயற்கை மழைப் பொழிவு (Cloud Seeding) நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.
நில உரிமையாளர்கள் காடுகள், களிமண் நிலங்கள் (Peatlands), குப்பை கிடங்குகள், தோட்டங்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பகுதிகளைக் கண்காணிக்குமாறும், திறந்தவெளியில் எரிப்பதைத் தவிர்க்குமாறும் சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் MyJAS EQMS செயலி அல்லது இணையதளம் மூலம் API குறியீட்டைப் பார்க்கவும், சுகாதார அமைச்சிடமிருந்து (KKM) சுகாதார ஆலோசனைகளைப் பெறவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
2024 சுற்றுச்சூழல் தரம் (திருத்தம்) சட்டத்தின் படி, திறந்தவெளியில் எரிக்கும் நபர்களுக்குக் குறைந்தபட்சம் RM25,000 முதல் அதிகபட்சம் RM1 மில்லியன் வரை அபராதம், அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது இவை இரண்டும் விதிக்கப்படலாம்.







