ஷா ஆலாம், 9 செப்டம்பர்: தற்போதைய புகைமூட்ட நிலவரத்தைத் தொடர்ந்து, சிலாங்கூரில் உள்ள தொழிற்சாலைகள் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி வழக்கம் போல் இயங்குவதற்கு இன்னும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நிலைமை மோசமடைந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதற்கு முன், மாநில அரசு சுற்றுச்சூழல் துறை மற்றும் தொடர்புடைய அமைப்புகளுடன் இணைந்து தற்போதைய முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணிக்கும் என மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ங் சுயி லிம் தெரிவித்தார்.
"தற்போதைய நிலவரப்படி, தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் வழக்கம் போல் உள்ளன, எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பை மட்டுமே மேற்கொண்டு வருகிறோம்."காற்று தூய்மைக்கேட்டு குறியீடு 200 அல்லது அதற்கு மேல் எட்டினால், சில குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்படலாம்," என்று மீடியா சிலாங்கூர் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
புகைமூட்டத்தைக் கையாள்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இன்னும் ஆலோசனையில் உள்ளதாகவும், இன்று நடைபெறும் மாநில அரசாங்க நிர்வாகக் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
திறந்தவெளியில் எரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அனைத்து தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
"புகையை உருவாக்கக்கூடிய மற்றும் அவசியமில்லாத தொழிற்சாலை நடவடிக்கைகள், நிலைமையை மேலும் மோசமாக்காமல் இருக்க, தற்போதைக்குத் தவிர்க்கப்பட்டால் நல்லது," என்று அவர் கூறினார்.
"தற்போதைக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், கட்டிடங்களுக்குள்ளான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், வெளிநடவடிக்கைகளைக் குறைக்க வேண்டும் மற்றும் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்," என்று அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.







