ஷா ஆலாம், ஆகஸ்ட் 7 - ஐந்து ஆண்டுகால இரண்டாவது சிலாங்கூர் திட்டம் செயலாக்கம் காண 33.31 பில்லியன் ரிங்கிட் நிதி தேவைப்படுகிறது.
அந்த நிதி மத்திய அரசு, மாநில அரசு, அரசு சார்ந்த துணை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினரிடமிருந்து திரட்டப்படும் என மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
ஆசியான் வட்டாரத்தில், நீடித்த - நிலைத்தன்மையான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட ஒரு முன்மாதிரி மாநிலமாக சிலாங்கூர் மாநிலத்தை உருவெடுக்க வைப்பதே அத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.
செமிகண்டக்டர்,விண்வெளித்துறை,டிஜிட்டல்- படைப்பாற்றல் முதலிய துறைகளும், உணவுப் பாதுகாப்பு மற்றும் கேரித் தீவில் அமையவிருக்கும் மூன்றாவது துறைமுக மேம்பாடும், இரண்டாவது மலேசியத் திட்டத்தின் கீழ் பொருளாதார நடவடிக்கைகளைத் தூண்டச் செய்யவிருக்கின்றன .
மேலும், RS-2 திட்டம் ஐந்தாண்டுகளில் குறைந்தது 1 லட்சத்து 66 -ஆயிரத்து 200 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சிலாங்கூர் மக்களின் சராசரி மாதாந்திர குடும்ப வருமானத்தை 14,500 ரிங்கிட்டாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் வேலையில்லா விகிதத்தை 2.2 விழுக்காடாகக் குறைக்கவும், அரசு சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கலை 85 விழுக்காடு அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடியைச் சமாளித்தல், அதிக சம்பளம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மலிவு விலை வீடுகளை கட்டித் தருவது , புதிய தொழில்துறைகளில் பொருளாதார வாய்ப்புகளைப் புதுப்பிப்பது போன்ற சவால்களைச் சிலாங்கூர் மாநிலம் எதிர்கொண்டுள்ளதாக அமிருடின் ஷாரி விளக்கினார்.
மாநில சட்டமன்றக் கூட்டத்தில், இரண்டாவது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்தப் பின்னர், அமிரூடின் ஷாரி இந்த விபரங்களை வெளியிட்டார்.
கீழுள்ள இணைப்பை கிளிக் செய்து RS-2 தொடர்பான மேல் விபரங்களைப் பெறலாம்
https://www.amirudinshari.com/rs2 https://www.selangor.gov.my/rs2







