RS-2 ஏகமனதாக ஏற்பு : 2030 வரையிலான சிலாங்கூரின் பொருளாதார கொள்கையாக அமையும்

13 ஆகஸ்ட் 2026, 3:26 PM
RS-2 ஏகமனதாக ஏற்பு : 2030 வரையிலான  சிலாங்கூரின்  பொருளாதார கொள்கையாக அமையும்

ஷா ஆலாம், ஆகஸ்ட் 13 — எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் உட்பட சுமார் 40 சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதத்தினை அடுத்து, இரண்டாவது சிலாங்கூர் திட்டம் (RS-2) இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம், 2026 முதல் 2030- ஆம் ஆண்டு வரையிலான மாநில வளர்ச்சித் திட்டத்தின் அதிகாரப்பூர்வ ஆவணமாக RS-2 மாறும்.

மேலும், சிலாங்கூரின் எதிர்கால வளர்ச்சிப் பாதையை நிர்ணயிப்பதில் இது அனைத்துத் தரப்பினருக்குமான முக்கிய வழிகாட்டியாக அமையும் என்றும் சட்டமன்றத் துணை சபாநாயகர் முகமட் கம்ரி கமாருடின் தெரிவித்தார்.

அத்துடன், நீதியின் அடிப்படையில் அமைந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், 2030 -ஆம் ஆண்டிற்குள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தவும், சிலாங்கூர் மாநிலத்தை 'ஆசியான் முன்மாதிரி மாநிலமாக' மாற்றுவதற்கான கடப்பாட்டினை அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து வழங்க வேண்டும் என்று, சட்டமன்றம் அழைப்பு விடுத்துள்ளது என்றும் அவர் விவரித்தார்.

இந்தத் திட்டத்திற்கான முன்மொழிவை மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார்.

அதைத் தொடர்ந்து சுமார் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் அத்திட்டம் குறித்து விவாதித்த நிலையில், இன்று அத்திட்டம் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டது.

பொருளாதார வளர்ச்சி, மக்களின் நல்வாழ்வு, மனித மூலதன மேம்பாடு , மாவட்டங்களுக்கு இடையிலான சமநிலை, சுற்றுச்சூழலை பேணுவது மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆறு முக்கிய நோக்கங்கள், 25 துறைகள் மற்றும் 98 முன்முயற்சிகளை இந்த RS-2 திட்டம் வரிசைப்படுத்தியுள்ளது.

பொருளாதாரத் துறையைப் பொறுத்தமட்டில், 2030 ஆம் ஆண்டிற்குள் 6.1 சதவீத பொருளாதார வளர்ச்சி, 330 பில்லியன் ரிங்கிட் ஒட்டுமொத்த முதலீடு மற்றும் வேலையின்மை விகிதத்தை 2.2 சதவீதமாகக் குறைப்பது ஆகியவற்றைச் சிலாங்கூர் மாநிலம் இலக்காகக் கொண்டுள்ளது.

மாவட்டங்களுக்கு இடையே உள்ள வருமான இடைவெளியைக் குறைப்பதற்கான முயற்சிகளுடன், வீட்டுவசதி மேம்பாடு, பொதுப் போக்குவரத்து மற்றும் இதர ஆதரவு வசதிகள் மூலமாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் இந்த RS-2 திட்டம் கூடுதல் கவனம் செலுத்துகிறது.

இக்கட்டமைப்பு முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) தொடர்ச்சியாக அமைகிறது என்பதுடன், 2030- ஆம் ஆண்டு வரையிலான சிலாங்கூரின் வளர்ச்சி இலக்குகளை அடைவதில் மாநில அரசின் முதன்மை வழிகாட்டியாகவும் இது செயல்படும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.