ஷா ஆலம், ஜூன் 19: உலகளாவிய விநியோகச் சங்கிலி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவின உயர்வை எதிர்கொள்ள மக்களுக்கு உதவும் வகையில், மாநில அரசு திட்டங்களின் கீழ் உள்ள 3,300-க்கும் மேற்பட்ட வீடு வாடகைதாரர்களுக்கு மூன்று மாதக் கால அவகாசம் அல்லது தற்காலிகக் கடன் தவணை விலக்கு (Moratorium) சலுகையைச் சிலாங்கூர் அரசு அறிவித்துள்ளது.
இந்த நிவாரண உதவித் திட்டமானது, மாநில அரசின் 'ஸ்மார்ட் சேவா' (Smart Sewa) வீட்டு வாடகைதாரர்களையும், மாநில அரசின் வீட்டுக்கடன் பெற்று தற்பொழுது அதற்கான மாதாந்திரத் தவணையைச் செலுத்தி வரும் மாநில அரசு ஊழியர்களையும் உள்ளடக்கும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில், சிலாங்கூரின் பொருளாதார ஆற்றலை வலுப்படுத்தும் திட்டத்தின் 2-ஆம் கட்டத்தை' (Fasa 2 Pakej Pengukuhan Daya Tahan Selangor) தாக்கல் செய்து உரையாற்றிய மந்திரி பெசார், இந்த திட்டத்தின் கீழ் எதிர்வரும் அக்டோபர் முதல் டிசம்பர் 2026 வரையிலான மூன்று மாத காலத்திற்கு 'ஸ்மார்ட் சேவா' திட்டத்தைச் சேர்ந்த 1,012 வாடகைதாரர்களுக்கு வீட்டு வாடகை செலுத்துவதிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்படும் என்றார்.
அடுத்த சில மாதங்களில் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்தால் வாடகைதாரர்கள் எதிர்கொள்ளக்கூடிய இக்கட்டான நிதிச் சூழ்நிலையால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கமளித்தார்.
சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியத்தால் (LPHS) வாடகைதாரர்களின் விண்ணப்பங்களின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்படும் இச்சலுகைக்காக, மாநில அரசு 2.22 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தற்போதைய மாதாந்திர வாடகை விகிதம் 450 ரிங்கிட் முதல் 1,300 ரிங்கிட் வரை உள்ள நிலையில், இந்த வாடகை விகிதம் மேலும் உயராமல் அப்படியே நிலைநிறுத்தப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என்றும் மந்திரி பெசார் உறுதியளித்தார்.
'ஸ்மார்ட் சேவா' வாடகைதாரர்களைத் தவிர்த்து, மாநில அரசின் வீட்டுக்கடன் திட்டத்தின் (Skim Pinjaman Perumahan Kerajaan Negeri) கீழ் நிதியுதவி பெற்று வீடு வாங்கியுள்ள 2,333 சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த மூன்று மாத காலக் கடன் தவணை ஒத்திவைப்புச் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தங்களது வீட்டுக்கடன் நிலுவைத் தொகையைச் செலுத்தி வரும் அரசு ஊழியர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், அக்டோபர் முதல் டிசம்பர் 2026 வரையிலான காலத்திற்கு இந்த சலுகை வழங்கப்படும் என்றும், இதற்காக மாநில அரசு 2.54 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதியை ஒதுக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், சிலாங்கூர் மாநில அரசு மக்கள் நலனுக்காக 355.06 மில்லியன் ரிங்கிட் பெருந்தொகையை ஒதுக்கியுள்ளது என்று மந்திரி பெசார் கூறினார்.







