ஷா ஆலம், ஆகஸ்ட் 7 – கித்தா சிலாங்கூர் பற்றுச்சீட்டு (Baucar Kita Selangor) திட்டத்திற்கு கடந்த ஜூலை மாதம் வரை 16,069 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் ஒப்புதல் செயல்முறையை விரைவுபடுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
விண்ணப்பதாரர்களின் வருமானத்தை உறுதிப்படுத்தும் நடைமுறை, ஒப்புதல் வழங்குவதில் தாமதத்தை ஏற்படுத்தியதால் இதுவரை 1,146 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
“மாநில அரசின் புதிய உத்தரவின்படி, ஆகஸ்ட் மாதத்திற்குள் குறைந்தது 10,000 முதல் 12,000 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்து, கித்தா சிலாங்கூர் பற்றுச்சீட்டு விநியோகத்தை விரைவாகத் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்று மந்திரி பெசார் கூறினார்.
இந்தத் திட்டத்தின் நிர்வாகப் பொறுப்பை Selcare நிறுவனம் மேற்கொள்ளும்; அதன் மூலம் விண்ணப்ப ஒப்புதல் மற்றும் பற்றுச்சீட்டு விநியோகப் பணிகள் மேலும் திறம்பட மேற்கொள்ளப்பட்டு, அதிகமான மக்களுக்குப் பயனளிக்க முடியும் என்றும் அமிருடின் தெரிவித்தார்.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலால் ஏற்பட்ட விநியோக நெருக்கடி மற்றும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ள சிலாங்கூரின் பொருளாதரத்தை வலுப்படுத்தும் தொகுப்பின் (Pakej Pengukuhan Daya Tahan Selangor) முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களுக்காக மாநில அரசு RM355.06 மில்லியன் ஒதுக்கியுள்ளது.
அதில், முதல் கட்டத்திற்காக RM145.8 மில்லியன் ஒதுக்கப்பட்டு ஏழு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டத்திற்காக RM209.26 மில்லியன் ஒதுக்கப்பட்டு, 15 புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.







