ஷா ஆலம், ஜூன் 16 – சிலாங்கூர் மாநில அரசின் ‘Baucar Kita Selangor’ கித்தா சிலாங்கூர் வவுச்சர் திட்டம் இன்னும் பொதுமக்களின் விண்ணப்பத்திற்காகத் திறக்கப்படவில்லை. இத்திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே எதிர்வரும் ஜூன் 23ஆம் தேதி முதல் கட்டமாக குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படும் என மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மாநிலச் செயலக அலுவலகம் (SUK), இந்த வவுச்சர் நிதியுதவியானது சம்பந்தப்பட்ட அரசு முகமைகளால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வத் தரவுகள் மற்றும் பட்டியல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட இலக்குக் குழுவினருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அந்த வகையில், இகாசிஹ் (eKasih) தரவுத்தளத்தில் உள்ள குடும்பங்கள், வேலை வாய்ப்பிழந்த தொழிலாளர்கள், சமூக நலத்துறை (JKM) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நலிவடைந்த பிரிவினர் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தகுதி வரம்புகளைப் பூர்த்தி செய்யும் தனித்து வாழும் தாய்மார்கள் ஆகியோர் இந்த உதவித்தொகையைப் பெற தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர் என அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.
தகுதியானப் பயனாளிகள் தங்களின் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், 'கித்தா சிலாங்கூர் வவுச்சர்' இணையப் பக்கத்தின் (Portal) வாயிலாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் ஏதுவாக, ஜூன் 23ஆம் தேதி முதல் அவர்களுக்குக் கட்டம் கட்டமாக எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.
அவ்வாறு குறுஞ்செய்தி பெறும் பயனாளிகள், தங்களின் விண்ணப்பச் செயல்முறையின் ஒரு பகுதியாகத் தேவைப்படும் கூடுதல் ஆவணங்களையும் (Supporting Documents) அந்த இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மாநில அரசு விவரித்துள்ளது.
எனவே, இந்தத் திட்டம் தொடர்பாகப் பொதுமக்கள் எவ்வித அவசர நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும், ஜூன் 23ஆம் தேதியன்று மாநில அரசு வெளியிடவிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகப் பொறுமையுடன் காத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே வேளையில், பொதுமக்கள் அனைவரும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், இத்திட்டத்தின் பெயரைப் பயன்படுத்தி வரும் சந்தேகத்திற்குரிய அல்லது தேவையற்ற இணையப் இணைப்புகளைக் (Links) கொண்ட குறுஞ்செய்திகளைச் சொடுக்க வேண்டாம் என்றும் மாநில அரசு எச்சரித்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் இணைய மோசடிகளில் சிக்கி ஏமாறுவதைத் தடுத்துக் கொள்ள முடியும்.
இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் அவ்வப்போது மாநில அரசின் அதிகாரப்பூர்வ ஊடகக் கணக்குகளின் வழி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







