காஜாங், ஆகஸ்ட் 31: இணைய மோசடிகள், போலிச் செய்திகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய சவால்களை எதிர்கொள்ள, மக்கள் தயாராக வேண்டும் என சிலாங்கூர் மந்திரி பெசார் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது நாட்டுக்கு எதிரான சவால்கள் டிஜிட்டல் தளங்களிலும் உருவெடுத்து வருவதாகவும் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.
இணைய மோசடிகள், போலிச் செய்திகள், அவதூறுகள் மற்றும் இன வேறுபாடுகளைத் தூண்டும் உணர்வுகள் மக்களிடையே பிளவை ஏற்படுத்தக்கூடும்.
கடந்த காலத்தில் நமது நாடு ஆக்கிரமிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவதற்கு நம்மிடையே இருந்த பலவீனமும் காரணமாக அமைந்தது என்றார் அமிருடின்.
மலேசியா 70ஆவது ஆண்டை நோக்கி நகரும் நிலையில், மக்கள் அறிவு, கல்வி, ஒழுக்கம் மற்றும் முதிர்ச்சியான சிந்தனை ஆகியவற்றின் மூலம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
இதன் மூலம் நம்பகத்தன்மையற்ற தகவல்களால் மக்கள் எளிதில் பாதிக்கப்படுவதைத் தடுக்க முடியும்.
அதேவேளை, சமூகத்தில் காணப்படும் வேறுபாடுகள் மக்களைப் பிரிப்பதற்காகப் பயன்படுத்தப்படக் கூடாது, மாறாக அவற்றை ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகக் கருத வேண்டும்.
சிலாங்கூர் மக்கள் தங்களது இனப் பின்னணி எதுவாக இருந்தாலும், அறிவு, ஒழுக்கம் மற்றும் தங்களது நம்பிக்கையின் அடிப்படையில் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று அமிருடின் அழைப்பு விடுத்தார்.







