கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு எதிராக இன்று குற்றச்சாட்டுகளை சுமத்தும் நீதிமன்ற வழக்கு நடைமுறை ஒத்தி வைக்கப்பட்டது.
கோலாலம்பூர் தேசிய இருதயக் கழகத்தில் (IJN) சிகிச்சைப் பெற்று வருவதால் , இஸ்மாயில் சப்ரி மீதான குற்றச்சாட்டுப் பதிவும், அவரது வாக்குமூலத்தைப் பெறும் நடைமுறையும் ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அவரது வழக்கறிஞர் டத்தோ அமர் ஹம்சா அர்ஷாட் முன்வைத்த ஒத்திவைப்பு மனுவை ஏற்றுக்கொண்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிமதி சுசானா ஹுசின் அந்த அனுமதியை வழங்கினார்.
நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (MACC) வாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்தபோது, இஸ்மாயில் சப்ரிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு விரைந்து தேசிய இருதய கழகத்தில் சேர்க்கப்பட்டார்.
இன்று மதியம் அவருக்கு பேஸ்மேக்கர் - இதய முடுக்கி கருவியைப் பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்பின் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பார்.
சொத்து அறிவிப்பு தொடர்பில் , 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டப் பிரிவு 36(2)-இன் கீழ் பெரா நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரி மீது இன்று குற்றம் சாட்டப்படவிருந்ததாக நீதிமன்ற அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் 66 வயது சப்ரி யாக்கோப் , சொத்து அறிவிப்புத் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் சில முறை வாக்குமுலம் பெற அழைக்கப்பட்டிருந்தார்.
கடந்தாண்டு பிப்ரவரியில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், வீடுகளிலும், அலுவலகங்களிலும் மேற்கொண்ட சோதனைகளில், 170 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு வெளிநாட்டு நாணயங்கள், 7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 16 கிலோகிராம் தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.







