காஜாங், ஆகஸ்ட் 7 – ஜாலான் செமினியில் சாலையைக் கடக்க முயன்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர், திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி மோதி உயிரிழந்தார்.
நேற்று மாலை சுமார் 7.30 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், 41 வயதுடைய அந்தப் பெண் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தை லாரி அடைந்தபோது, அருகிலிருந்த பேரங்காடி பகுதியிலிருந்து அப்பெண் சாலையைக் கடக்க முயன்றதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசுப் கூறினார்.
எதிர்பாராத விதமாக அப்பெண்ணைத் தவிர்க்க முடியாமல் போனதால் மோதல் ஏற்பட்டதாகவும், பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவப் பணியாளர்கள், தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதாகவும் நாஸ்ரோன் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவு 41(1)-இன் கீழ், கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தை அணுகவோ அல்லது காஜாங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போக்குவரத்து புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் ராசிமான் ராசிட்டை 019-456 5502 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.







