ஷா ஆலாம், ஜூலை 31 - இன்று அதிகாலை குவா முசாங்-கோலா கிராய் சாலையில், குவா செஜுக் அருகில் டீசல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியுடன் மைவி கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஓர் ஆணும், ஒரு பெண்ணும் மற்றும் ஒரு சிறுவனும் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் மற்றொரு பெண்ணும் காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்துத் தகவல் அளித்துள்ள கோவா முசாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையப் பொறுப்பாளர் முகமட் அஸ்ருல் இஸ்ஹாம் சுல்கிப்லி, காலை 7.16 மணியளவில் விபத்து குறித்த அவசர அழைப்பு தங்களுக்குக் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
உடனே, கோவா முசாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து எட்டு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதாக அவர் கூறினார்.
வாகனத்திற்குள் சிக்கிக்கொண்டவர்களைத் தீயணைப்புத் துறையினர் தங்களது மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி வெளியே எடுத்ததாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த நபர் மேல் சிகிச்சைக்காகக் கோவா முசாங் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.








