ஷா ஆலாம், ஜூ லை 17 : அனுமதியின்றி வெளிநாட்டுத் தொழிலாளர்களை நிர்வகித்து விநியோகம் செய்து வந்ததாக நம்பப்படும் ஒரு கும்பலின் நடவடிக்கையை மலேசிய குடிநுழைவுத் துறை வெற்றிகரமாக முறியடித்தது.
ஒரு மாத கால உளவுத் தகவல்களின் அடிப்படையில், புத்ராஜெயா குடிநுழைவுத்துறை தலைமையகத்தின் உளவுத்துறை மற்றும் சிறப்பு நடவடிக்கை பிரிவினர் கடந்த ஜூலை 15 ஆம் தேதி செமினி (Semenyih) சுற்றியுள்ள இரு வளாகங்களை அதிரடியாக சோதனையிட்டனர்.
அந்த நடவடிக்கையில் 27 முதல் 57 வயதுக்குட்பட்ட ஏழு வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
அதில் நிறுவனத்தின் உரிமையாளராகவும் முதலாளியாகவும் செயல்பட்டதாக நம்பப்படும் வங்களாதேசத்தைச் சேர்ந்த ஒரு நபரும் அடங்குவார். இவர்களுடன் வங்களாதேசத்தைச் சேர்ந்த நான்கு ஆண்கள், ஒரு வங்களாதேச பெண் மற்றும் ஒரு தாய்லாந்து பெண் ஆகியோரும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குடிநுழைவுத் துறையின் ஆரம்பகட்ட சோதனையில், வங்களாதேச முதலாளி மலேசிய நிரந்தர குடியுரிமை (MyPR) தகுதியைக் கொண்டிருப்பதும், மற்றொரு வங்களாதேச நபர் மாணவர் விசாவையும் , தாய்லாந்து பெண் உணவகத் தொழிலாளருக்கான தற்காலிக வேலை விசாவையும் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட மற்ற வெளிநாட்டினரிடம் இந்நாட்டில் தங்கியிருப்பதற்கான எந்தவொரு விசா அல்லது முறையான பயண ஆவணங்களும் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
இந்தச் சோதனையின் போது, 31 வங்களாதேச பயண கடப்பிதழ்கள், ஒரு தாய்லாந்து பயண கடப்பிதழ், மலேசிய நிறுவன ஆணையத்தின் (SSM) ஆவண நகல்கள் மற்றும் 48 ஆயிரத்து 524 ரிங்கிட் ரொக்கப் பணம் ஆகியவற்றை குடிநுழைவுத் துறை பறிமுதல் செய்தது.
விசாரணையின்படி, இக்கும்பல் முறையான அனுமதியின்றி வெளிநாட்டுத் தொழிலாளர்களை நிர்வகித்து விநியோகித்து வந்துள்ளது.
அதிகாரிகளின் பார்வையில் படாமல் இருக்க வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களை தங்களின் செயல்பாட்டு தளங்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.
இக்கும்பல் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைப்படும் உள்ளூர் முதலாளிகளை குறிவைத்துள்ளனர்.
விசாக்களை நிர்வகிப்பதற்கும் புதுப்பிப்பதற்கும் ஒரு நபருக்கு தலா 4,000 ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.








