ஷா ஆலாம், ஆகஸ்ட் 5 — கிள்ளான், தாமான் பெர்க்லியில் இயங்கி வந்த பலகாரக் கடை ஒன்றில் கார் மோதிய விபத்தில் கடை உதவியாளர் ஒருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்தது.
கடைக்கு முன்புறம் அமைந்திருந்த வாகன நிறுத்துமிடத்திலிருந்து வாகனத்தை வெளியே எடுக்க முயன்றபோது, ஓட்டுநர் தவறுதலாகப் பிரேக் பெடலுக்குப் பதிலாக ஆக்ஸிலேட்டர் பெடலை மிதித்ததே இந்த விபத்துக்குக் காரணம் என நம்பப்படுவதாக வட கிள்ளான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி கமிஷனர் ராம்சே எம்போல் தெரிவித்தார்.
இந்த விபத்தில், பெண் கடை உதவியாளர் லேசான காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக கிள்ளான் KPJ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதேவேளையில், காயமடைந்த கார் ஓட்டுநரும் மேல்சிகிச்சைக்காக சன்வே மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகத் தகவல் தெரிந்த பொதுமக்கள், வட கிள்ளான் மாவட்டக் காவல் துறை தலைமையகத்தின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவின் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் கிஷன் ராஜ் (Kishen Raj) அவர்களை 011-26249291 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு ராம்சே கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு, 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 43(1)ஆம் பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கார் மோதியதால் முன்பகுதி சேதமடைந்த பலகாரக் கடையின் புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.







