கோலாலம்பூர்,ஆகஸ்ட் 5 — பெட்டாலிங் ஜெயாவில் பரிந்துரைக்கப்பட்ட புதிய பொது மருத்துவமனைக்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வருகின்றன .
இவ்வாண்டு இறுதிக்குள் நில உரிமையாளருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒரு விரிவான உடன்பாட்டை எட்ட முடியும் என்று சிலாங்கூர் மாநில அரசு நம்புகிறது.
இந்த மருத்துவமனை திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும் கூட்டரசு அரசாங்கத்திற்கும் இடையே ஏற்கனவே பல கட்டங்களாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன என சிலாங்கூர் மாநில பொது சுகாதார - சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீன் தெரிவித்தார்.
தற்போது இந்தத் திட்டம் கலந்துரையாடல் கட்டத்தில் இருப்பதாகவும், நில உரிமையாளர் மற்றும் அவரது பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார் .
நேற்று MAHSA அவென்யூவில் நடைபெற்ற '2026 புவி இயக்கத்தின்' விருது வழங்கும் விழாவைத் தொடக்கி வைத்தப் பிறகு ஊடகங்களிடம் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த மே மாதம் 27-ஆம் தேதி, சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட், தாமான் மேடானில் 'X Park PJ South' விளையாட்டு வளாகம் அமைந்திருக்கும் ஆறு ஹெக்டர் நிலம் , புதிய பெட்டாலிங் ஜெயா மருத்துவமனைக்கான சாத்தியமான இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார் .
மற்ற இடங்களுடன் ஒப்பிடும்போது இந்த நிலத்தின் விலை குறைவு என்பதுடன், பழைய மருத்துவமனைகளில் ஏற்படுவது போன்ற கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன நிறுத்தப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு, இங்கு போதுமான வாகன நிறுத்த வசதிகளை உருவாக்க இடம் மிகப்பொரியதாக இருக்கும் என்றும் சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த புதிய மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடனும், ஐந்து முக்கிய சிறப்பு மருத்துவப் பிரிவுகளுடன் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது சொந்தமாக அரசு மருத்துவமனை இல்லாத, மக்கள் தொகை அதிகம் கொண்ட பெட்டாலிங் மாவட்டத்தில் பொது சுகாதாரச் சேவைகளை மேம்படுத்துவதற்காக சிலாங்கூர் மாநில அரசு எடுத்து வரும் நீண்டகால முயற்சியின் ஒரு முக்கியப் பகுதியாக இந்த புதிய பெட்டாலிங் ஜெயா மருத்துவமனை திட்டம் அமைகிறது.








