ஷா ஆலாம், ஆகஸ்ட் 5 — தாய்லாந்து, சுங்கை கோலோக்கில் உள்ள சாந்திபாப் மைதானத்தில் கோலோக் எப்.ஏ கோப்பை காற்பந்து தொடரின் அரையிறுதி ஆட்டம் நிறைவடைந்த பிறகு, மைதானத்தில் திடீரென மின்னல் தாக்கியதில் மலேசிய வீரர் உட்பட 12 பேர் காயமடைந்த நிலையில் தாய்லாந்து வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை பலத்த மழை பெய்து கொண்டிருந்த வேளையில், சாம்கோல்ட்ஸ் (SAMCOLTS) மற்றும் அபு எக்ஸ் நோங் சாரின் (Abu x Nong Sirin) அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டம் முடிந்த சில நிமிடங்களில், உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 5.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக சுங்கை கோலோக் காவல்துறை தலைவர் கர்னல் துன் சிறிகுந்த் (Thun Sirikhunt) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகக் காவல்துறை அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், உயிரிழந்தவரின் உடல் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தலைவர் தெரிவித்தார்.
மேலும், காயமடைந்த அனைவரும் உடனடியாகச் சிகிச்சைக்காகச் சுங்கை கோலோக் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.







