26,001 மரம் விழுந்த சம்பவங்கள் பதிவு; 50 பேர் உயிரிழப்பு: JBPM தகவல்

7 ஆகஸ்ட் 2026, 1:47 AM
26,001 மரம் விழுந்த சம்பவங்கள் பதிவு; 50 பேர் உயிரிழப்பு: JBPM தகவல்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – நாடு முழுவதும் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை மரங்கள் விழுந்த சம்பவங்களில் 50 பேர் உயிரிழந்ததுடன், 243 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்துள்ளார். இந்தக் காலக்கட்டத்தில் மொத்தம் 26,001 மரங்கள் விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 1,912 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 4 பேர் உயிரிழந்ததோடு 20 பேர் காயமடைந்ததாக அவர் தெரிவித்தார்.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வரும் இந்தப் பிரச்சனையைக் களைய ஊராட்சி மன்றங்களும் கட்டட உரிமையாளர்களும் மரங்களின் பாதுகாப்பு நிலையை முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.

குறிப்பாக, முக்கிய சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொது பூங்காக்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள மரங்களுக்கு பாதுகாப்பு மதிப்பீடு கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் நோர் ஹிஷாம்.

இந்த ஆய்வுகள் தகுதியும் நிபுணத்துவமும் பெற்ற அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், மரத்தின் தண்டு, கிளைகள், இலைப்பகுதி, வேரமைப்பு, மரத்தின் சாய்வு நிலை மற்றும் அதைச் சுற்றியுள்ள மேம்பாட்டுப் பணிகளின் தாக்கம் ஆகியவை முழுமையாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதிக ஆபத்தான நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்படும் மரங்களுக்கு கிளைகளை வெட்டுதல், சிகிச்சை அளித்தல், மரத்தை அகற்றுதல் போன்ற உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

கனமழை மற்றும் பலத்த காற்று போன்ற வானிலை நிலைகளே மரக் கிளைகள் முறிவதற்கும் மரங்கள் சாய்வதற்கும் முக்கியக் காரணமாக இருப்பதாகவும், வயது முதிர்வு, நோய் தாக்கம், அழுகல் மற்றும் கட்டமைப்பு பலவீனம் போன்ற காரணிகளும் இந்த அபாயத்தை அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.