
கோம்பாக், ஆகஸ்ட் 12 : சிலாங்கூர் மகளிர் காற்பந்து அணி, 2026 சுக்மா மலேசிய விளையாட்டுப் போட்டியில், தனது குரூப் ஏ பிரிவுக்கான தொடக்க ஆட்டத்தில் கூட்டரசுப் பிரதேச அணியை 7-0 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது.
அவ்வாட்டம் நேற்றிரவு செலாயாங் அரங்கில் நடைபெற்றது.
சிலாங்கூர் அணி ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி, 7-வது நிமிடத்திலேயே தற்காப்பு ஆட்டக்காரர் இயூஸ்வேவானா காடியஸ் மூலமாக முதல் கோலை அடித்து கணக்கைத் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து 25-வது நிமிடத்தில் நுராதிகா பத்ரிஸ்யா முகமட் ராசிப் தனியாகப் பந்தைக் கடத்திச் சென்று இரண்டாவது கோலை அடித்தார்.

மத்திய திடல் ஆட்டக்காரர் டெகன் சூ-யின் பட்லர், 45-வது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடிக்க, முற்பாதி ஆட்டம் முடியும் போது சிலாங்கூர் அணி 3-0 என வசதியான முன்னிலையைப் பெற்றது.
பிற்பாதி ஆட்டம் தொடங்கியதும், சிலாங்கூர் அணி எதிரணிக்கு மேலும் நெருக்கடி கொடுத்தது. அதன் பலனாக 56-வது நிமிடத்தில் கூட்டரசுப் பிரதேச அணியின் கோல் கம்பத்திற்கு முன் ஏற்பட்ட பரபரப்பான சூழலைப் பயன்படுத்தி எஸ். திவாசினி நான்காவது கோலை அடித்தார்.

மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கிய நூர் லைலா சியாமிலா ஏ ரஹீம், 70-வது நிமிடத்திலும் மற்றும் 78-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பின் மூலமும் அடுத்தடுத்து இரண்டு கோல்களை விளாசினார்.
அதன் பிறகு 86-வது நிமிடத்தில் ஜஃபிரா ஜுலைகா முகமட் ஜுஹ்ரி சிலாங்கூர் அணியின் ஏழாவது கோலை அடித்து ஆட்டத்தை முழுமையாக நிறைவு செய்தார்.
இவ்வளவு பெரிய கோல் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், ஆனால் இந்த வெற்றியை வீராங்கனைகளின் கடின உழைப்பிற்கும் கூட்டு முயற்சிக்கும் அர்ப்பணிப்பதாக சிலாங்கூர் அணியின் உதவிப் பயிற்சியாளர் பெலிசியா அடீல் எங் கூறினார்.








