தாய்லாந்தில் 87kg போதைப் பொருளுடன் 3 மலேசியர்கள் கைது!

4 ஆகஸ்ட் 2026, 2:29 AM
தாய்லாந்தில் 87kg போதைப் பொருளுடன் 3 மலேசியர்கள் கைது!

ஷா ஆலாம், ஆகஸ்ட் 4 - தாய்லாந்து நாட்டின் ஹட் யாய் ரயில் நிலையத்தில் நேற்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 4.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 87 கிலோகிராம் எடையுள்ள மெத்தாம்ஃபெட்டமின் எனப்படும் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று மலேசியர்கள் தாய்லாந்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து காவல்துறைப் பேச்சாளர் வெளியிட்ட தகவலின்படி, ஹட் யாய் காவல்துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, ரயில்வே காவல்துறைப் படை, சுற்றுலாப் காவல்துறை மற்றும் வட்டாரப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் எண் 9 ஆகியவை இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் பேங்காக்கில் இருந்து ஹட் யாய் நோக்கி ரயிலில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தை அடைந்தவுடன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அந்த சோதனையின் போது, சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த ஐஸ் போதைப்பொருள் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த போதைப்பொருட்கள் அனைத்தும் மலேசியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் ஒப்படைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறை வலுவாக நம்புகிறது.

மேலும், முதற்கட்ட விசாரணையின் மூலம், இந்தத் தடை செய்யப்பட்ட போதைப்பொருளைக் குறிப்பிட்ட இலக்கு இடத்திற்குக் கொண்டு சேர்த்தால் ஒவ்வொரு சந்தேக நபருக்கும் 8,000 ரிங்கிட் கூலி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது, தாய்லாந்து மற்றும் வெளிநாடுகளில் இயங்கி வரும் இந்த எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்புடைய முக்கிய மூளையாகச் செயல்பட்ட நபர் மற்றும் ஏனைய கூட்டாளிகளை அடையாளம் காணும் தீவிர விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களும் தற்போது தாய்லாந்து நாட்டின் கடுமையான போதைப்பொருள் சட்டங்களின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.