ஜகார்த்தா, ஜூலை 31 - போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் ஜகார்த்தாவின் முக்கிய விமான நிலையத்தில் மலேசிய விமானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதுடைய அந்த விமானி, பணியில் இருந்தபோது போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் ஜகார்த்தா தலைநகருக்குள் 26 கிலோகிராம் எடையுள்ள எம்.டி.எம்.ஏ எனப்படும் போதைப்பொருளைக் கடத்த முயன்றதாக இந்தோனேசியாவின் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜகார்த்தாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்தோனேசிய சுங்கத்துறை அதிகாரி, அந்த விமானி கோலாலம்பூரிலிருந்து ஜகார்த்தாவிற்கு மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கி வந்தவர் என கூறினார்.
சுமார் RM50,000 சன்மானம் தருவதாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் விடுத்த கோரிக்கையின் பேரில், அந்த விமானி தனது பயணப் பெட்டியில் எம்.டி.எம்.ஏ போதைப்பொருளை ரகசியமாக ஜகார்த்தாவிற்குக் கடத்தி வந்துள்ளார் என்று சுங்கத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட விமானிக்கு நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அவர் கோகைன் மற்றும் மெத்தபெட்டமைன் ஆகிய போதைப்பொருட்களை உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இந்தோனேசிய மற்றும் மலேசிய அதிகாரிகளுக்கிடையே பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக இந்தோனேசியா மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015-ஆம் ஆண்டு, பாலி தீவிலிருந்து ஹெரோயின் கடத்த முயன்ற 'பாலி நைன்' கும்பலைச் சேர்ந்த இரண்டு ஆஸ்திரேலிய நாட்டினருக்கு அந்நாடு மரண தண்டனை நிறைவேற்றியது இங்கு நினைவுகூரத்தக்கது.








