ஷா ஆலாம், ஆகஸ்ட் 3: சிலாங்கூரின் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைந்து தற்போது 1.8 விழுக்காடாக உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை முதல் இதுவரை 50,226 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புக்கான மாநில ஆட்சிக்குழு(EXCO) உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.
மாநிலத்தின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் சுமார் 78.5 விழுக்காடாக உயர்ந்து காணப்படுவது, சிலாங்கூரின் வேலைவாய்ப்புச் சந்தை மிகவும் நிலையானதாக விளங்குவதைப் பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மாநிலத்தின் மேம்பட்டு வரும் பொருளாதாரச் செயல்திறனும், தரமான முதலீடுகளை ஈர்ப்பதில் தொடர்ச்சியான வெற்றியுமே இந்தச் சாதனைகளின் முக்கியக் காரணமாகும் என்று அவர் மேலும் விளக்கினார்.
இன்றைய சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய அவர், "இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சிலாங்கூர் 33.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளைப் பதிவு செய்துள்ளதுடன், நாட்டிலேயே அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்றார்.
இதில் சேவைகள், உற்பத்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம், குறிப்பாகத் தரவு மையங்கள் (data centres), உயர் தொழில்நுட்பத் தொழில்கள் மற்றும் உலகளாவிய சேவைகள் போன்ற துறைகள் அடங்கும்.
உயர் தொழில்நுட்பம், டிஜிட்டல் பொருளாதாரம், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (TVET) மற்றும் உள்ளூர் திறமை மேம்பாட்டுத் துறைகள் மீதான நிலையான கவனம், எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சியை மேலும் தூண்டுவதுடன் அதிகமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
மாநிலத்தின் தொலைநோக்குத் தலைமைத்துவம், சீரான மாநிலக் கொள்கைகள் மற்றும் முதலீட்டு, வர்த்தக மற்றும் தொழில்துறைத் துறைகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் நேரடி விளைவே இந்த மாபெரும் வெற்றியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தின் (MIDA) தரவுகளின்படி, ஜூன் 8 நிலவரப்படி, சிலாங்கூர் அதிகபட்சமாக 33.5 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு மதிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஜோகூர் மற்றும் கோலாலம்பூர் தலா 16.9 பில்லியன் ரிங்கிட்டுகளுடனும், பினாங்கு 6.2 பில்லியன் ரிங்கிட்டுடனும், சரவாக் 4 பில்லியன் ரிங்கிட்டுடனும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.







