ஷா ஆலாம், ஆகஸ்ட் 3: பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் தெருநாய்கள் விவகாரத்தில் மாநில அரசு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.
அதேவேளையில் அந்த அமலாக்க நடவடிக்கைகள் மனிதநேயத்தோடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வலியுறுத்தியுள்ளார்.
விலங்குகள் நலனைக் காப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பைப் பாதுகாப்பதற்கும் இடையே சரியானதொரு சமநிலையைக் கடைப்பிடிப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுவே நாம் எட்ட வேண்டிய சரியான சமநிலை என்று குறிப்பிட்ட அவர், இச்சம்பவம் தொடர்பாகச் சிலாங்கூர் துங்கு பெர்மாய்சூரி அவர்களும் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்றார்.
எனவே, இதில் கோபப்படத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், சிலருக்கு விலங்குகளின் நலன் மீதும், சிலருக்கு மனிதர்களின் நலன் மீதும் அக்கறை உள்ளது என்று விளக்கினார். பொதுமக்களின் நலனைக் காக்கும் பொருட்டு அரசாங்கம் தொடர்ந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
பொது இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் குறைப்பதற்காக அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். எவ்வாறாயினும், அந்த அணுகுமுறை எப்போதும் சமநிலையானதாகவும் மனிதநேயம் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சிலாங்கூர் மாநிலத்தில் தெருநாய்கள் விவகாரம் குறித்துப் புகார்களை எழுப்புவோர் ஒருதலைபட்சமாகச் செயல்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுவது முற்றிலும் நியாயமற்றது என்றும், தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.







