ஷா ஆலாம், ஆகஸ்ட் 3: வணிக உரிமங்களை வெளிநாட்டினருக்கு விற்பனை செய்யும் அல்லது கைமாற்றும் எந்தவொரு தரப்பினரையும் கருப்புப் பட்டியலில் சேர்ப்பது உட்பட கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிலாங்கூரில் உள்ள ஊராட்சி மன்றங்களுக்கு (PBT) மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் செயல்கள் விதிகளை மீறுவது மட்டுமல்லாமல், சமூகத்தில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதுடன் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியையும் கடுமையாகப் பாதிக்கிறது என்று டத்தோ மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இன்றைய சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில், டுசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹான் அப்துல் அஜீஸ், ரோஹிங்கியா இனத்தவர் உட்பட வெளிநாட்டினர் விவகாரங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
சிலாங்கூரில் வெளிநாட்டினர் வணிக உரிமங்களையோ அல்லது சொத்துகளையோ சொந்தமாக வைத்திருக்க மாநில அரசு எந்தக் காலத்திலும் அனுமதிக்காது என்பதே எங்களின் மாறாத நிலைப்பாடு என்று அமிருடின் தெளிவுபடுத்தினார்.
மக்களின் நலன்களைப் புறக்கணிக்காமலும் சட்டத்திற்கு மதிப்பளிப்பதையும் உறுதிப்படுத்தும் அதேவேளையில், மனித உரிமைகள் தொடர்ந்து மதிக்கப்படுவதற்கான ஒரு சமநிலையான புள்ளியை நாம் எட்ட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.







