ஷா ஆலம், ஜூன் 23 – சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தொழில்முறை மற்றும் வணிக வளாகங்களில், வெளிநாட்டினரோடு தொடர்புடைய வணிக உரிமப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மாநில அரசு குடிநுழைவுத் துறையுடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறது.
வெளிநாட்டு ஆண்களுக்கும் உள்ளூர் பெண்களுக்கும் இடையே நடக்கும் சந்தேகத்திற்குரிய திருமணங்களின் எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் தெரிவித்தார்.
வணிக உரிம விதிமுறைகளில் உள்ள சாதகமான சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே இத்தகைய திருமணங்கள் அரங்கேற்றப்படுவதாக நம்பப்படுகிறது. சிலாங்கூர் மாநிலத்தின் முக்கிய வணிக மையங்களாகத் திகழும் ஷா ஆலமின் சுங்கை ராசாவ் மற்றும் செக்ஷன் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதிகாரிகள் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, சம்பந்தப்பட்ட வெளிநாட்டினர் உள்ளூர் மனைவியின் வியாபாரத்திற்கு உதவி செய்ய மட்டுமே இங்கு இருப்பதாகக் கூறி தப்பித்துக் கொள்கின்றனர். இந்த வணிக உரிமங்கள் அனைத்தும் மலேசியக் குடிமக்களின் பெயரிலேயே சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுப்பதில் உள்ளாட்சி அமைப்புகளுக்குப் பெரும் சவலான சூழல் நிலவுகிறது.
வணிக உரிம நிபந்தனைகளை மீறியதற்கான தகுந்த ஆதாரங்கள் இல்லாவிடில், உள்ளாட்சி அதிகாரிகளால் இந்த உரிமங்களை அவ்வளவு எளிதில் ரத்து செய்ய முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இத்தகையச் சூழலில், உள்ளூர் மக்களின் வணிக அனுமதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக, குறிப்பாக வெளிநாட்டினரைத் திருமணம் செய்துள்ள உள்ளூர்வாசிகளுக்கு வணிக உரிமங்களை வழங்குவது தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து சிலாங்கூர் அரசு முன்னதாகவே பரிசீலித்து வந்தது.
இருப்பினும், வணிக உரிமங்கள் சட்டப்பூர்வமாக மலேசியத் தம்பதியரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் தீர்க்கமான சட்ட நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசு இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது.







