சிலாங்கூரில் இதுவரை 72 சட்டவிரோதத் தொழிற்சாலைகள் இடிக்கப்பட்டன

3 ஆகஸ்ட் 2026, 5:12 AM
சிலாங்கூரில் இதுவரை 72 சட்டவிரோதத் தொழிற்சாலைகள் இடிக்கப்பட்டன

ஷா ஆலாம், ஆகஸ்ட் 3: அங்கீகரிக்கப்படாத கட்டடங்களுக்கு எதிரான தனது தொடர் கடுமையான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரசாங்க நிலங்களில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 72 ஆலைகளைச் சிலாங்கூர் மாநில அரசு இடித்துத் தள்ளியுள்ளது என்று மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் சுற்றுலாத்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சுய் லீம் இதனைத் தெரிவித்தார். இதில் 53 கட்டடங்கள் ஷா ஆலம் பகுதியிலும், 19 கட்டடங்கள் கிள்ளான் பகுதியிலும் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வழங்குவது, நிலத்தின் தகுதியைச் சரிபார்ப்பது மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய முகமைகளுடன் ஒருங்கிணைப்புச் செய்வது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடைமுறைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட பின்னரே, இந்த இடிப்பு நடவடிக்கைகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டதாக அவர் விளக்கினார்.

புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிஷ்யகரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார். சட்டவிரோத ஆலைகள் மற்றும் முறையற்ற நில மேம்பாடுகளைக் கையாள்வது தொடர்பான சிலாங்கூர் அரசின் நடவடிக்கைகளைக் குறித்து ராஜிவ் கேள்வி எழுப்பியிருந்தார்.

பொதுமக்களின் பாதுகாப்பு, உடைமைகளை அகற்றுவது, போக்குவரத்து மேலாண்மை மற்றும் இடிப்புப் பணிகளால் உருவாகும் கழிவுகளை அப்புறப்படுத்துவது ஆகிய அனைத்து அம்சங்களையும் முழுமையாகக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த இடிப்பு நடவடிக்கைகளால் வியாபாரிகள், சிறுதொழில் நடத்துபவர்கள் மற்றும் தொழிலாளர்கள் தற்காலிகமாகப் பாதிக்கப்படலாம் என்பதை மாநில அரசு ஒப்புக்கொள்கிறது என்றாலும், பரந்த அளவிலான பொதுமக்களின் நலனைக் காப்பதற்குக் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் அவசியமானவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோத ஆலைகளால் நிலக் கட்டணம், வரிகள் மற்றும் மேம்பாட்டுடன் தொடர்புடைய கட்டங்கள் செலுத்தப்படாததன் காரணமாக மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், தீ விபத்து அபாயங்கள், சுற்றுச்சூழல் மாசுபாடு, போக்குவரத்து நெரிசல், குடியிருப்புப் பகுதிகளுக்கு ஏற்படும் இடையூறுகள் மற்றும் முறையற்ற நிலப் பயன்பாடு உள்ளிட்ட பல ஆபத்துகளும் ஏற்படுகின்றன என்று அவர் எச்சரித்தார்.

மேலும், காலி செய்யப்பட்ட நிலங்கள் சட்டவிரோதக் குப்பைக் மேடுகளாக மாறுவதைத் தடுக்கும் பொருட்டு, உரிய முகமைகள் தங்களின் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், அப்பகுதிகளுக்குத் தடைகள் அல்லது வேலிகளை அமைப்பது குறித்தும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.