ஷா ஆலாம், செப் 19 - வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்ட ( SIP/EIS) பங்களிப்பாளர்கள் , அக்டோபர் முதலாம் தேதி தொடங்கி இன்னும் அதிகமான நன்மைகளைப் பெறவுள்ளனர்.
2017 வேலை காப்பீட்டு முறை சட்ட (( சட்டம் 800 ) திருத்தம் அமலுக்கு வருவதின் மூலம், அந்த பலன்களை பங்களிப்பாளர்கள் அனுபவிக்க விருப்பதாக, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.
இந்த மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக 'பயண உதவித்தொகை' (Elaun Bantuan Mobiliti - EBM) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் கீழ், ஒரு பங்களிப்பாளர் தனது வீட்டிலிருந்து 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் ஒரு புதிய வேலையைப் பெற்றால், அவருக்கு ஒருமுறை மட்டும் வழங்கப்படும் நிதியாக 1,000 ரிங்கிட் வழங்கப்படுமென அவர் கூறினார்.
மேலும், முன்கூட்டியே வேலை கிடைப்பதற்கான ஊக்கத் தொகை ( Elaun Bekerja Semula Awal - EBSA) 25 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.
"அதே வேளையில், பயிற்சிக்கான ஊக்கத் தொகை (Elaun Latihan) ஒரு நாளைக்கு 10 ரிங்கிட்டிலிருந்து 30 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதே சமயம், பயிற்சிக் கட்டணம் (Fi Latihan) அதிகபட்சமாக வழங்கப்பட்ட 4,000 ரிங்கிட்டிலிருந்து 7,000 ரிங்கிட் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது," என்று ரமணன் கூறினார்.
இன்று பெட்டாலிங் ஜெயாவில், ஐ -லிண்டுங்கு ( iLINDUNGu) மாபெரும் விழாவைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக 3 நாள் நடைபெறும் அந்த விழா, மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு (MITRA) உட்பட, மனிதவள அமைச்சின் கீழ் உள்ள 11 அமைப்புகளையும் துறைகளையும் ஒன்றிணைத்திருக்கிறது.






