சுங்கை பூலோ, ஜன 19 — கடந்த 2024ஆம் ஆண்டு முதல் சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் 4,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு கல்வி தொடர்பான பல்வேறு திட்டங்கள் மூலம் RM1.2 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.
பள்ளிக்குத் திரும்புதல், உயர்கல்வி உதவி மற்றும் எஸ்.பி.எம் சிறந்த மாணவர் ஊக்கத்தொகை போன்ற திட்டங்களால் பயனடைந்த பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்கள் பயனடைந்தனர். இதில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மாணவர்களும் அடங்குவர்.
மனிதவள அமைச்சராகவும் இருக்கும் ரமணன், பிரகாசமான எதிர்காலத்திற்கான திறவுகோல் கல்வி என்பதால் அதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
“கல்வி மூலம், மாணவர்கள் சிறந்த வேலைகளையும் நிலையான வருமானத்தையும் பெற முடியும். இது அவர்களின் குடும்பங்களை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இந்த உதவி அவர்களின் சுமையைக் குறைக்க உதவுவதோடு கல்வியில் சிறந்து விளங்க அவர்களை ஊக்குவிக்கும் என நம்புகிறேன்,” என்று ரமணன் கூறினார்.
அமானா இக்தியார் மலேசியா (AIM) உடன் இணைந்து நடைபெற்ற சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதிக்கான ``பள்ளிக்குத் திரும்புதல்`` திட்ட நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில், 1,000 மாணவர்கள் உதவி பெற்றனர். அவர்களில் 750 பேர் புதிய பள்ளி பருவத்திற்குத் தயாராவதற்கு தலா RM150 ரொக்கமாகப் பெற்றனர். மீதமுள்ள பெறுநர்களுக்கு பள்ளி பைகள், சீருடைகள் மற்றும் எழுதுபொருட்கள் போன்றவை வழங்கப்பட்டன.
சுங்கை பூலோவில் கல்வி தொடர்பான திட்டங்களை தொடரவும் விரிவுபடுத்தவும் தனது உறுதிப்பாட்டை செய்தியாளர்கள் சந்தித்தபோது ரமணன் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
"இந்த ஆண்டு, பல்வேறு தரப்பினர்களுடன் இணைந்து, சுங்கை பூலோ நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் மூலம் கூடுதல் கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்," என்றும் அவர் விவரித்தார்.


