ஷா ஆலாம், ஆகஸ்ட் 2 ; கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு (KLIA) அருகிலுள்ள தங்கும் விடுதிகள் உட்பட, எஸ்.ஐ.சி (SIC) செப்பாங் அனைத்துலக கார் பந்தயத் தளத்திலிருந்து 15 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள தங்கும் விடுதிகள், F1 கார் பந்தயம் நடைபெறும் காலத்திற்கு முழுமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் பெரும்பாலானவை பந்தய அணிகள் மற்றும் நிதியாதரவு தரப்புகளால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் சுற்றுலாத் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி சுவா யீ லிங் தெரிவித்தார்.
அந்த சுற்றளவுக்கு வெளியே உள்ள ஐ.ஓ.ஐ சிட்டி மால் (IOI City Mall) சுற்றியுள்ள தங்கும் விடுதிகளும் கிட்டத்தட்ட நிரம்பியுள்ளன என்று அவர் கூறினார்.
"டிக்கெட்டுகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை என்றாலும், சுற்றியுள்ள தங்கும் விடுதிக்கான பதிவுகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
F1 ரசிகர்கள் மற்றும் வணிகர்கள் இந்த பந்தயத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர், மேலும் இதனால் ஏற்படப்போகும் பொருளாதாரத் தாக்கம் மிகவும் பெரியதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று சுவா யீ லிங் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
F1 பஹ்ரைன் கார் பந்தயம் செப்பாங் அனைத்துலக பந்தயத் தளத்தில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அப்பந்தயத்துக்கான டிக்கெட் விலையை பஹ்ரன் தரப்பே முடிவு செய்து அந்த டிக்கெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயையும் அந்நாடே எடுத்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.







