ஷா ஆலாம்,ஜூலை 9 - இந்தோனேசியா, பண்டுங்-குடன் (Bandung) இரு வழி உறவை வலுப்படுத்திக் கொள்ள சிலாங்கூர் ஆர்வம் காட்டியுள்ளது. குறிப்பாக, பல்வேறு சுற்றுலாத் திட்டங்களின் மூலம் பண்டுங் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களை சிலாங்கூருக்கு வருகைப் புரிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென சிலாங்கூரின் சுற்றுலா மீதான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ங் சுயி லிம் தெரிவித்தார்.
அந்நோக்கத்திற்காக, சிலாங்கூர்- பண்டுங் சுற்றுலா துறைகளுக்கு இடையில் இசை நிகழ்ச்சிகள், மருத்துவ சுற்றுலா போன்ற துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படுமென அவர் கூறினார்.
இன்று பண்டுங்கில் தொடங்கியிருக்கும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டின் நெடுகே சுற்றுலா மருத்துவம், சுகாதார சேவை தொடர்பான கண்காட்சிகள் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேற்கு ஜாவா மாகாணத்தின் தலைநகரான பண்டுங் 24 லட்சம் மக்கட் தொகையைக் கொண்டுள்ளது.







