எஃப்1 பந்தயத்தை மீண்டும் நடத்தும் திட்டம் அரசுக்கு இல்லை - மக்களவையில் தகவல்

21 ஆகஸ்ட் 2025, 6:01 AM
எஃப்1 பந்தயத்தை மீண்டும் நடத்தும் திட்டம் அரசுக்கு இல்லை - மக்களவையில் தகவல்

கோலாலம்பூர், ஆக. 21 - அதிக செலவினம் காரணமாக சிப்பாங் அனைத்துலகப் பந்தயத் தடத்தில் (எஸ் ஐ.சி.) ஃபார்முலா 1 போட்டியை  மீண்டும் நடத்தும் திட்டம் மலேசியாவிடம் இல்லை என்று இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

எனினும், இப்போட்டிக்கான ஏற்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்த  தனியார் நிறுவனங்கள் ஆர்வமாக இருந்தால்  இதில் ஒத்துழைக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.

எஃப்1 போட்டியை  ஏற்று நடத்தும் உரிமைக்காக நாடு ஆண்டுக்கு சுமார் 30 கோடி வெள்ளியும் சுற்றுகளின் கிரேடு 1 உறுதியளிப்பு  மதிப்பீட்டைப் பராமரிக்க ஆண்டு ஒதுக்கீட்டில் கூடுதலாக 1 கோடி வெள்ளியும் செலுத்த வேண்டும் என்று மக்களவையில்   தெனிவித்தார்.

கொள்கையளவில், மலேசியா எஃப்1 இன் வணிக உரிமையை வைத்திருக்கும் லிபர்ட்டி மீடியாவுடன் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஏற்பாட்டு ஆதரவு  ஒப்பந்தத்தில் பிணைக்கப்படும். ஐந்து ஆண்டு காலத்திற்கு சுமார் 150 கோடி வெள்ளி கடப்பாடு என்பது இதன் பொருளாகும் என்று அவர் கூறினார். 

மலேசியா மீண்டும் எஃப்1 பந்தயத்தை ஏற்று நடத்தும திட்டம் மற்றும்  பந்தயத் தடத்தின் பயன்பாட்டை   அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து  சிபு நாடாளுமன்ற உறுப்பினர் ஆஸ்கார் லிங் சாய் யூ எழுப்பிய கேள்விக்கு ஹன்னா இயோ இவ்வாறு பதிலளித்தார். 
இது தவிர,  ஃபார்முலா 1 போட்டிக்கு  மீண்டும் உயிரூட்டுவது குறித்து மலேசியா பரிசீலித்தாலும்  ஏற்கனவே 23 இடங்களைக் கொண்ட விளையாட்டின் வருடாந்திர அட்டவணையில் இவ்வாண்டிற்கான  ஒரு இடத்தைப் பெறுவதற்கு  நாடு இன்னும் போட்டியிட வேண்டியிருக்கும்.

சிங்கப்பூர் ஏற்கனவே 2008 முதல் பந்தயத்தை ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் தாய்லாந்து 2028 முதல் பந்தய அட்பவணையில்  சேர்க்கப்பட உள்ளது. மற்ற ஆசியான் நாடுகளில் இந்த நிகழ்வை நடத்துவது மலேசியாவின் ஏற்பாட்டு  வருமானத்தை பாதிக்கலாம் என்றார் அவர்.

இருப்பினும், எஃப்1 பந்தயத்திற்கு  மலேசியா முழுமையாக கதவை மூடவில்லை. ஏற்பாட்டு  உரிமைக் கட்டணங்களை ஈடுகட்ட ஆர்வமுள்ள பெருநிறுவனக் தரப்பினர் இருந்தால் அவர்கள் மேலும் விவாதங்களுக்கு எஸ்.ஐ.சி. தரப்பினரைத் தொடர்பு கொள்ளலாம். நாங்கள் திறந்த மனதுடனும் ஒத்துழைக்கத் தயாராகவும் இருக்கிறோம் என்று இயோ கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.