கோலா பிலா, ஆகஸ்ட் 2 — நெகிரி செம்பிலானின் புதிய மந்திரி பெசாராக ஜூவாசே சட்டமன்ற உறுப்பினர் டத்தோ இஸ்மாயில் லாசிம் இன்று பதவியேற்றார்.
இன்று காலை 11.29 மணியளவில் செரி மெனாந்திப் அரண்மனையில், யாங் டி பெர்துவான் பெசார் நெகிரி செம்பிலான், துவாங்கு முஹிரிஸ் துவாங்கு முனாவிர் அவர்கள் முன்னிலையில் 67 வயதுடைய டத்தோ இஸ்மாயில் லாசிம் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
ஜூவாசே சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட டத்தோ இஸ்மாயில் லாசிம், பெசத்து கட்சியைச் சேர்ந்த முகமட் சுஹைமி முகமட் யூசோப் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் கட்சியைச் சேர்ந்த முகமட் ஐடில் அப்துல்லா ஆகியோரைத் தோற்கடித்து 4,323 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.
கோலா பிலா அம்னோ தொகுதித் தலைவரான இவர், கடந்த 2018 முதல் 2023 ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் ஜூவாசே சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
ஜூவாசே தொகுதி மட்டுமின்றி, கடந்த 1999 நவம்பர் முதல் 2018 மே வரையிலும், பின்னர் 2023 ஆகஸ்ட் முதல் மீண்டும் செனாலிங் சட்டமன்றத் தொகுதியையும் இவர் தலைமையேற்று நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







