கிள்ளான், ஆகஸ்ட் 2 - கிள்ளானில் தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது நாய் ஒன்று உயிரிழந்த சம்பவம் குறித்து முழுமையான மற்றும் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில கால்நடை சேவைகள் துறை (JPV) உறுதியளித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகக் கடந்த ஜூலை 30-ஆம் தேதியன்று இரவு சுமார் 9.25 மணியளவில் 'MyAnimalWelfare' அமைப்பு வாயிலாக பல புகார்கள் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகார்களுடன் வைரலான காணொளியில், ஒரு குழுவினர் நாயைக் கட்டி அதன் கழுத்தைப் பிடித்து இழுப்பதும், ஒரு பெண் அதை விடுவிக்குமாறு கதறுவதும் பதிவாகியிருந்தது.
"சிலாங்கூர் கால்நடை சேவைகள் துறையின் முதற்கட்ட விசாரணையில், கிள்ளான் அரச மாநகர் மன்றம் (MBDK) ஏற்பாட்டில், அப்பகுதி குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்புடன் கடந்த ஜூலை 29-ஆம் தேதி இரவு சுமார் 10.50 மணியளவில் தாமான் தெலுக் கெடுங் இண்டா பகுதியில் நாய்கள் பிடிக்கும் நடவடிக்கை நடைபெற்றது தெரியவந்துள்ளது.
மக்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்யும் நோக்கில், தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உள்ளூர் மன்றங்கள் மேற்கொள்ளும் தொடக்க நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்த நாயைப் பிடிக்கும் நடவடிக்கை அமைந்திருந்தது," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூலை 31-ஆம் தேதி காலை சுமார் 11 மணியளவில், வைரலான காணொளியில் இடம்பெற்றதாக நம்பப்படும் ஆண் நாயின் சடலத்தை பெண் ஒருவரிமிருந்து விலங்கு நலப்படை (PKH) பெற்றுக் கொண்டதாகச் சிலாங்கூர் கால்நடை சேவைகள் துறை தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மேல் விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு சிலாங்கூர் கால்நடை சேவைகள் துறையின் விலங்கு நலப்படை காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
"குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 112-இன் [சட்டம் 593] கீழ் இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய சந்தேக நபர்கள் மற்றும் சாட்சிகள் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
விலங்கு நலச் சட்டம் 2015-இன் [சட்டம் 772] பிரிவு 29(1)(e)-இன் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது. இச்சட்டத்தின்கீழ் குற்றவாளிகளுக்கு 20,000 ரிங்கிட்டிற்குக் குறையாமல் மற்றும் 100,000 ரிங்கிட்டிற்கு மிகாமல் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மிகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்," என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







