பெட்டாலிங், ஜெயா, ஜூலை 31- கிள்ளான் துறைமுகம், தாமான் தெலுக் கெடுங் இண்டா பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று கொடூரமாகக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று விலங்கு நலக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.
மலேசிய விலங்குகள் நலச் சங்கத்தின் தலைவர் கலைவாணன் ரவிச்சந்திரன் வெளியிட்ட அறிக்கையின்படி, 'ராக்கி' என்று பெயரிடப்பட்ட அந்த நாய் புதன்கிழமை இரவில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமையாளர் கதறி அழுதபோதும், அந்த நாய் கழுத்தில் கயிற்றால் கட்டப்பட்டு தரதரவென்று இழுத்துச் செல்லப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்ததாக அவர் கூறினார். இந்தச் சம்பவம் நடந்த இடத்தில் கிள்ளான் அரச மாநகர மன்ற (MBDK) இரண்டு அதிகாரிகளும் உடனிருந்ததாகக் கலைவாணன் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பவ இடத்தில் அதிகாரிகளின் பங்கு என்ன, ராக்கியின் கழுத்தில் இறுக்கப்பட்ட கயிற்றை ஏன் அவர்கள் தடுத்து நிறுத்தவில்லை, மேலும் அந்தப் பகுதி மக்கள் எந்தவொரு அதிகாரியின் அறிவுறுத்தல் அல்லது அனுமதியின் பேரில் இந்தச் செயலில் ஈடுபட்டார்களா என்பது குறித்து நகராண்மைக் கழகம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ராக்கியின் கழுத்தில் போடப்பட்ட இறுக்கமான கயிற்றை அவிழ்த்துவிடுமாறும், தனது செல்லப்பிராணியைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு உரிமையாளர் மீண்டும் மீண்டும் கெஞ்சும் காட்சிகளை உள்ளடக்கிய காணொளிப் பதிவும் வெளியாகியுள்ளது.
சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், மாநகர மன்றம் தனது தரப்பில் விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பில் தாங்கள் புகார் பெற்றுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெற்கு கிள்ளான் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.







