கங்கார், செப். 27 – அரசு நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதில் சும்பாங்கான் துனாய் ரஹ்மா (STR) உள்ளிட்ட அரசாங்க உதவிகளைப் பெறுவதற்கான பதிவு எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
டிக்டொக் போன்ற சமூக ஊடகத் தளங்களில் சில கணக்குகள் அரசாங்க அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்துவதுடன், அரசாங்க நிறுவனங்களே உதவிக்கான பதிவுகளை மேற்கொள்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வருவதாக டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
எனவே, சமூக ஊடகங்களில் பரவும் எந்தவொரு தகவலையும் உடனடியாக நம்பாமல், அதன் உண்மைத் தன்மையை அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் சரிபார்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கச் சேவைகள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அல்லது பதிவுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அரசாங்க நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ வழிகள் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.
சரிபார்க்கப்படாத சமூக ஊடகக் கணக்குகள் அல்லது சந்தேகத்திற்குரிய இணைப்புகள் மூலம் அரசாங்க உதவிகளுக்கு விண்ணப்பிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
அதேவேளை, சமூக ஊடகங்களில் எந்தவொரு தகவலையும் பகிர்வதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஃபஹ்மி கேட்டுக்கொண்டார்.
இதுவரை, மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (SKMM), சமூக ஊடகத் தளங்களில் இருந்து கிட்டத்தட்ட 500,000 உள்ளடக்கங்களை அகற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அவற்றில் 85 முதல் 90 விழுக்காடு வரை மோசடி மற்றும் இணையவழி சூதாட்டம் தொடர்பான உள்ளடக்கங்களாக உள்ளன.




